கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமான பணி தீவிரம்

ஈரோடு, பிப். 24:   ஈரோடு கலெக்டர் அலுவலக பின்புறத்தில் 7 அடுக்குகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது.

 ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகமானது 7 தளங்கள் கொண்டது. ஆனால் போதிய இடவசதி இல்லாததால், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.இதைத்தொடர்ந்து அனைத்து அலுவலகங்களையும் ஒரே வளாகத்தில் கொண்டு வர புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கிருந்த மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலக பின்புற வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.41.6 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் பூமி பூஜையுடன் கட்டுமான பணிகள் துவங்கியது. இந்த புதிய கட்டிடம் 7 அடுக்குகள் கொண்டதாகவும், டிஜிட்டல் நூலகம், அவசர சிகிச்சை மையத்துடன் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.  இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம் 7 அடுக்குகள் கொண்டதாக அமைய உள்ளது. இதில் இரண்டு தரைத்தளமும் வாகன நிறுத்தத்திற்கு பயன்படுத்தப்படும். அலுவலகத்திற்கு செல்ல நான்கு லிப்ட் வசதி, பிரமாண்ட அவசர கால வழி, பழைய கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு செல்ல இணைப்பு நடைபாலம், அனைத்து தளத்திலும் கழிப்பறை வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.புதிய கலெக்டர் அலுவலகத்தின் கட்டுமான பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும்போது இந்த கட்டிடத்தில் 32 துறை அலுவலகங்கள் அமையவுள்ளது. இந்த பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது, என்றனர்.

Related Stories: