பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது

திருவண்ணாமலை, பிப்.23: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய- மாநில அரசுகளை கண்டித்தும் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே மாவட்ட திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையான பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். அதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எ.வ,வேலு பேசியதாவது: வரலாறு காணாத பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை பொதுமக்களை கடுமையாக பாதித்திருக்கிறது. எனவேதான், இந்த போராட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் செல்லும்போது, அந்தந்த மாநில மொழியில் பிரதமர் மோடி பேசுகிறார். அதேபோல், தமிழகத்துக்கு வரும்போது அவ்வையார் பாடலை பாடுகிறார். ஆனாலும், தமிழர்களை ஏமாற்ற முடியாது. எனெனில், இந்தியாவுக்கே தமிழகம் வழிகாட்டியாக இருக்கிறது. ரதமரானதும் சுவிட்ஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை கொண்டுவருவேன், ஒரு குடும்பத்துக்கு ₹15 லட்சத்தை வங்கிக் கணக்கில் போடுவேன் என மோடி தெரிவித்தார். ஆனால், தமிழக மக்கள் ஏமாறவில்லை. திமுகவுக்கு 39 எம்பிக்களை கொடுத்தார்கள். கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பதிலாக ₹500, ₹1000 செல்லாது என்று அறிவித்ததால், நாடு பின்நோக்கி சென்றது. ஜிஎஸ்டி கொண்டுவந்தால் பாலும், தேனும் ஓடும் என்றார்கள். ஆனால், ரிசர்வ் வங்கியில் சேமித்து வைத்திருந்த ₹1.70 லட்சம் கோடியும் காலியானது. ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டனர். எனவே, இதுபோன்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க, பழைய விலைக்கு பெட்ரோல், டீசல், காஸ் கிடைக்க தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய வேண்டும். முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.தரன், மருத்துவர் அணி மாநில துணை தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர்கள் சி.சுந்தரபாண்டியன், பரமேஸ்வரி ராஜ்குமார், பாரதிராமஜெயம், பொறியாளர் அணி கு.கருணாநிதி, தொமுச சவுந்தரராசன், வழக்கறிஞர் அணி கே.வி.மனோகரன், மாவட்ட அவைத் தலைவர் கே.ஆர்.சீதாபதி, முன்னாள் எம்எல்ஏக்கள் ஆர்.சிவானந்தம், வ.அன்பழகன், அ.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் நன்றி கூறினார்.

Related Stories:

>