விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். ஏற்கனவே நெல்லை தொகுதியில் எம்எல்ஏவாக உள்ள நயினார் நாகேந்திரன், இந்த முறை தொகுதி மாறி போட்டியிடுகிறார். ஆனால் அவசரப்பட்டு தொகுதி மாறிவிட்டோமோ என்று கவலைப்படும் அளவிற்கு நயினாரின் நிலைமை இங்கு படு பரிதாபமாக உள்ளது. தொகுதியை தங்களுக்கு ஒதுக்காததால் அதிருப்தியில் உள்ள அதிமுக, அமமுகவினர் பிரசாரத்திற்கு ஒத்துழைக்காமல் முழுமையாக ஒதுங்கி கொண்டனர்.மேலும், தனது சொந்த சமூகத்தை நம்பி நயினார் சாத்தூரில் களமிறங்கினார்.
இதற்கு வேட்டு வைக்கும் வகையில் சசிகலா கட்சி சார்பில் இசக்கிராஜா என்பவர் போட்டியிடுகிறார். நயினார் நம்பி இருந்த சமூக ஓட்டுக்களை இவர் அள்ளி எடுத்துக் கொள்வார் என்பதால், கடும் விரக்தியில் உள்ளராம் நயினார். இதற்காக, பிரசாரத்திற்கு தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நடிகர், நடிகைகளை அழைத்து வருகிறார். சாத்தூர் தொகுதியில் தினசரி பத்து சின்னத்திரை நடிகர், நடிகைகள் என புதுசு புதுசாக களமிறங்கி பாஜவிற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கள நிலவரம் தெரியாத நடிகர், நடிகைகள், நயினாரை, ‘ஆஹா ஓஹோ’ என்று ஓவராக புகழ்ந்து பேசுவதை கேட்டு, தொகுதி மக்களே நமட்டு சிரிப்பு சிரித்து வருகின்றனர்.
