பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் டயரை உருட்டி விவசாயிகள் ேபாராட்டம்

திருவண்ணாமலை, பிப்.23: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, சைக்கிள் டயரை உருட்டி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம ்முன்பு, நூறு நாள் வேலைத்திட்ட உழவர் பேரவை சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல், காஸ் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். மேலும், சைக்கிள் டயரை உருட்டியபடி சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதோடு, சமையல் காஸ் விலையேற்றத்தை கட்டுப்படுத்த, சாண எரிவாயு பயன்படுத்த மானியம் அளிக்க வேண்டும், இயற்கை வளங்களில் இருந்து மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதையொட்டி, சாண எரிவாயு அடுப்பு மாதிரியை அமைத்திருந்தனர். இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்ததாவது: பெட்ரோல் டீசல் விலை உயர்வு விவசாயிகளுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்து பொருட்களின் விலையும் இதனால் உயரும். சமையல் காஸ் விலை உயர்ந்ததால், எழை, நடுத்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் மீண்டும் விறகு அடுப்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்றனர்.

Related Stories: