×

வாக்காளர் அட்டைகளை ஒப்படைக்க வந்த மக்கள்

திருச்செங்கோடு, ஏப்.21: திருச்செங்கோடு அருகேயுள்ள மொளசி முனியப்பம்பாளையம் பகுதியில், பட்டா நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்ததை கண்டித்து, அப்பகுதி மக்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட மொளசி முனியப்பன்பாளையம் பகுதியில், காவிரி ஆற்றின் ஓரத்தில் தகன மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தகனமேடைக்கு செல்வதற்கு ஒரு பாதை மட்டுமே உள்ளது. அந்த பாதையில் 17க்கும் மேற்பட்ட வயல்களில் இருந்து பட்டா நிலம் சேர்ந்து, அரசு பாதை அமைப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, பட்டா நிலத்தில் பாதை அமைக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். நேற்று அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், தாலுகா அலுவலகத்திற்கு வந்து, தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை ஆர்டிஓ லெனினிடம் ஒப்படைக்க முயன்றனர்.

ஆனால், ஆர்டிஓ வாக்காளர் அடையாள அட்டைகளை வாங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மக்கள், அவரது வாகனத்திற்கு முன்பு அட்டைகளை கீழே போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருச்செங்கோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வன் அங்கு வந்தார். பின்னர் ஆர்டிஓ லெனின் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர், பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் முடிந்ததும், இது தொடர்பாக சமரச பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆர்டிஓ லெனின் உறுதியளித்தார். அதனை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Tiruchirappalli ,Molasi Muniyappalayam ,Trichengo ,Taluga ,Patta ,Molasi Muniyappanpalayam ,Trichengodu Taluka ,
× RELATED வாக்குச்சாவடிகளுக்கு முதியவர்களை...