முக்கூடல் அருகே திமுக இளைஞரணி செயலர் கொலையில் உறவினர் கைது

நெல்லை, பிப். 23: முக்கூடல் அருகே திமுக இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் கொலை வழக்கில் உறவினரை போலீசார் கைதுசெய்தனர். அப்போது அவர் பூர்வீக சொத்தை பிரித்துதர மறுத்ததால் தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். முக்கூடல் அருகேயுள்ள வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சுப்புக்குட்டி மகன் செல்லத்துரை (38). நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி செயலாளரான இவருக்கும், உறவினரான பத்தல்மேட்டைச் சேர்ந்த பழனிவேல்சாமி என்ற ராசுகுட்டி மகன் ஐயப்பன் (52) என்பவருக்கும்  நிலத்தகராறால் முன்விரோதம் உருவானது. கடந்த 18ம் தேதி செல்லத்துரை அப்பகுதியிலுள்ள தனது தோட்டத்திற்கு பைக்கில் சென்றபோது வழிமறித்த ஐயப்பன் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார். இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய நிலையில் நெல்லை எஸ்பி அலுவலகத்தில் ஐயப்பன் நேற்று சரணடைந்தார். இதையடுத்து அவரை கைதுசெய்த முக்கூடல் பொறுப்பு இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா தலைமையிலான போலீசார், பைக் மற்றும் அரிவாளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், ‘‘செல்லத்துரை ரூ. பல கோடி  மதிப்பிலான பூர்வீக சொத்தில் எங்களுக்கு வரவேண்டிய சொத்தை பிரித்து தராமல் பல ஆண்டுகளாக காலம் கடத்தி வந்ததோடு உறவினர்களிடம் என்னை பற்றி அவதூறாக பேசி வந்ததால் திட்டமிட்டு  அரிவாளால் வெட்டிக்கொலை செய்தேன்’’ என ஐயப்பன் பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: