50 சதவீத கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் சங்கரன்கோவிலில் போராட்டம்

சங்கரன்கோவில், பிப். 23: சங்கரன்கோவில்  50 சதவீத கூலி உயர்வு மற்றும் விடுப்பு சம்பளம் ரூ.450 வழங்கக்கோரி வட்டார விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் நேற்று அடையாள  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சங்கரன்கோவிலில் செயல்படும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் பணியாற்றி வரும் சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு 50 சதவீத கூலி உயர்வு மற்றும் விடுப்பு சம்பளம் ரூ.450 வழங்கக்கோரி சங்கரன்கோவில் வட்டார விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர்  நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு  விசைத்தறி கூடங்கள் இயங்கவில்லை.  இதைத்தொடர்ந்து விசைத்தறி தொழிலாளர்கள் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிஐடியு நகரத் தலைவர் ரத்னவேலு தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் வட்டாரச் செயலாளர் அசோக்ராஜ்,  சக்திவேல், சுப்ரமணியன், லட்சுமி உள்ளிட்ட விசைத்தறி தொழிலாளர்கள் என திரளானோர் பங்கேற்றனர். பின்னர் கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.

Related Stories: