தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தென்காசி, பிப். 23: தென்காசியில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். முறையாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை பணியாளருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தேவி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சுப்புலட்சுமி, திருப்பதி, சரோஜா, விஜயராணி முன்னிலை வகித்தனர். வட்ட கிளைத் தலைவர் தாயம்மாள் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ஞானம்மாள், சிஐடியு மாவட்டத் தலைவர் வேல்முருகன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் திருமலை முருகன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கோயில்பிச்சை, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராஜசேகரன், தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் சேகர், நாராயணன், சலீம் முகமது மீரான், சமூக நலத்துறை பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் துரைசிங், சிஐடியு லெனின் குமார், மகாவிஷ்ணு, ஆரிய முல்லை உள்ளிட்டோர் முகாமிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார்.

Related Stories: