இடைத்தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டு சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் பேச்சு

புதுச்சேரி, பிப் 23:  புதுச்சேரி சட்டசபையில் தனது  அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது முதல்வர் நாராயணசாமி  பேசும்போது, 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 15, திமுக 2,  சுயேட்சை 1 என 18 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. நான்  முதல்வராக தேர்வு செய்யப்பட்டேன். தொடர்ந்து கூட்டணி கட்சிகள் ஆதரவோடு  இடைத்தேர்தலில் வெற்றிபெற்று மக்கள் பணியாற்றினேன். இதில் 70 சதவீத  வாக்காளர்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலிலும்  வைத்திலிங்கம் எம்பி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலிலும் காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு மக்கள் அமோக  ஆதரவளித்தனர். காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் மீண்டும் காங்கிரஸ்  வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றார். புதுச்சேரி மாநில மக்கள் இந்த  அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் மக்கள்  நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு போதுமான நிதியை மத்திய அரசு  கொடுக்கவில்லை. துணை நிலை ஆளுநராக கிரண்பேடியை நியமித்து தினமும் பல வகைகளில் தொல்லைகளை கொடுத்தனர். ஆனால், இதனையெல்லாம் எதிர்க்கட்சிகள் தட்டிக்  கேட்காமல் வேடிக்கை பார்த்தனர். இந்த அரசு 5 ஆண்டு காலத்தை முழுமையாக  பூர்த்தி செய்துள்ளது. பல ஆண்டுகளாக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்கள் இன்னும் 10  நாட்களே உள்ள நிலையில் ஆட்சி கவிழ்ப்பு அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளனர்.

இருப்பினும்  நாங்கள் பல்வேறு இடர்பாடுகள் இக்கட்டான சூழலிலும் மக்கள் நலத்திட்டங்களை  நிறைவேற்றியுள்ளோம். திருக்காஞ்சி, கடலூர் சாலை, அரும்பார்த்தபுரம், கைக்கிலப்பட்டு உள்ளிட்ட 4 மேம்பாலங்களை  கட்டி திறந்துள்ளோம். மேரி கட்டிடம் திறப்பு விழா நடைபெற இருந்த நிலையில்,  சிலர் செய்த இடையூறால் அதை திறக்க முடியவில்லை. காமராஜர் மணிமண்டபம்,  உப்பனாறு பாலம், காரைக்கால் நேரு மார்க்கெட், காரைக்கால் புதிய நீதிமன்ற  வளாகம், நீதிபதிகள் தங்கும் விடுதி, 120 ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் போன்ற  திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு  சம்பளம் வழங்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஆனால், கேரளா,  தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அகவிலைப்படி, சம்பளம் பிடித்தம்  செய்யப்பட்டபோதும், புதுச்சேரியில் முழுமையான சம்பளத்தை வழங்கினோம்.  இதேபோல் காமராஜர் கல்வி உதவி தொகை திட்டம், 5 ஆண்டு காலம் எந்தவித  தங்குதடையின்றி கொடுத்தோம். ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ஆரம்ப பள்ளி முதல்  ஆராய்சி படிப்பு வரை அரசே ஏற்கும் என்பதை அகில இந்திய அளவில் யாரும்  செய்ய முடியாத விஷயத்தை செய்துள்ளோம். இதனை பெருமையாக கருதுகிறோம்.

கலைஞர்  பெயரில் காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கோப்பு அனுப்பினால் துணை நிலை  ஆளுநர் பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் போட்டு அந்த கோப்புக்கு அனுமதி  கொடுக்காமல் அலைய வைத்தார். கொரோனா காலத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்  எல்லாம் மக்களுக்கு செய்த பணிகளை யாரும் மறுக்க முடியாது. அமைச்சர்கள்  கந்தசாமி, கமலக்கண்ணன், எம்எல்ஏக்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன் ஆகியோர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தனர். அந்தளவுக்கு அவர்களது பணி  இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: