கடனை திருப்பி கொடுக்காததால் ஆத்திரம் காருடன் வாலிபர் கடத்தல்: 4 பேர் கைது: இருவருக்கு வலை

செங்கல்பட்டு: வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால், கடன் கொடுத்தவர்கள் வாலிபர் மற்றும் 2 காரை கடத்தி சென்றனர். இதுதொடர்பாக போலீசார், 4 பேரை கைது செய்தனர். 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருக்கழுக்குன்றம் அருகே மணமை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(30). ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலு (30) என்பவருக்கு ₹6 லட்சம் கடன் கொடுத்துள்ளார். கொரோனா பரவல்  காலத்தில், போதிய வருமானம் இல்லாததால், வாங்கிய கடனை  திருப்பி கொடுக்க முடியாமல் பாலு அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சதீஷ், அவரது நண்பர்கள் உட்பட 6 பேர் பாலு வீட்டுக்கு சென்றனர். அங்கு, வாங்கிய கடனை திருப்பி தரும்படி கேட்டு பாலுவிடம் வாக்குவாதம்  செய்தனர்.  அப்போது பாலு, தற்போது என்னிடம் பணம் இல்லை. எனவே, இப்போதைக்கு பணம் கொடுக்க முடியாது என கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சதீஷ், அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலு மற்றும் அவரது 2 கார்களை கடத்தி சென்றனர். அவர்களது கார், செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் கூட் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது அ்ங்கு,  செங்கல்பட்டு தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்தநேரத்தில், ஒரு காரில் இருந்து,   ‘என்னை காப்பாற்றுங்கள்’ அலறல் சத்தம் கேட்டது. உடனே போலீசார், அந்த காரை விரட்டி சென்று மடக்கி பிடித்து, பாலுவை மீட்டனர்.  மேலும், காரில் இருந்தவர்களை மறைமலைநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், திருக்கழுக்குன்றம் அடுத்த மணமை ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்த நரேஷ் (20), விஷால் (21), பிரசாந்த்  (20), 17 வயது சிறுவன் என தெரிந்தது. 4 பேரை கைது செய்து ஒரு கார் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். முக்கிய குற்றவாளியான சதீஷ், விக்னேஷ்(30) ஆகியோர் பாலுவின் மற்றொரு காரில் தப்பி சென்றனர். அவர்களை போலீசார்  வலைவீசி தேடி வருகின்றனர். மறைமலைநகரில் சினிமா பாணியில், பணத்துக்காக வாலிபரை, காரில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: