அரியலூர், ஏப். 20: தென்னை மரத்தில் கருந்தலை புழுக்களை அழிப்பதற்கு நவீன வழிமுறைகள் குறித்து வேளாண் துறையினர் விளக்கமளித்துள்ளனர். தமிழகம் முழுவதும் அதிக இடங்களில் தென்னை பயிர் உள்ளனர். இந்நிலையில் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக, தென்னையில் கருந்தலைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. கருந்தலைப்புழு, அனைத்து வயது தென்னை மரத்தையும் தாக்கக்கூடியது. இப்புழு ஆயிரக்கணக்கில் இலையின் அடிப்பகுதியில் கூடுகளை உருவாக்கி, இலையில் உள்ள பச்சயத்தை உறிஞ்சுவதால் இலைகள், தென்னை மரங்கள் தீயினால் கருகியது போல் காணப்படும்.
கருந்தலை புழு தாக்கிய தென்னை மட்டைகளை வெட்டி அதனை அகற்றி, தீ வைத்து அழிக்க வேண்டும். இதனை கட்டுப்படுத்த பெத்தலிட், பிரக்கோனிட் ஆகிய ஒட்டுண்ணிகளை தோப்புகளில் விட வேண்டும். மேற்படி ஒட்டுண்ணிகள் ஹெக்டருக்கு 3 ஆயிரம் என்ற அளவில் தாக்குதல் உள்ள இடத்தில் தென்னந்தோப்புகளில் விட வேண்டும். தாக்குதல் அதிகமாக இருந்தால் ஓலையின் அடிப்பகுதியில் நன்கு படுமாறு, டைக்குளோர்வாஸ் (100 ஈசி) 0.02 சதவீதம் அல்லது மாலத்தீயான் (50 ஈசி) 0.05 சதவீதம் (1 மி.லி.,) இதில் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.
இதனைக் கட்டுப்படுத்த வேர் வழியாக பூச்சி மருந்து செலுத்தலாம். பூச்சி மருந்து செலுத்தி ஒரு மாத காலத்திற்கு காய்களையோ, இளநீரையோ உபயோகப்படுத்தக்கூடாது. மருந்து தெளிப்பதற்கு முன்பாக முற்றிய காய்களை பறித்து விட வேண்டும். மோனோகுரோட்டோபாஸ் 36 சதவீதம், எஸ்.எல்., என்ற பூச்சி மருந்தை மரம் ஒன்றுக்கு 10 மி.லி உடன் 10 மி.லி., தண்ணீர் கலந்து வேர் வழியாக செலுத்த வேண்டும் என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
