ஆற்றில் மூழ்கிய வாலிபரை மீட்க கோரி உறவினர்கள் சாலை மறியல்: 4 மணி நேரத்திற்கு பிறகு சடலம் மீட்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அடுத்த கரிகலவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(28). நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள ஆர்.ஆர்.கண்டிகை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில்  குளிப்பதற்காக சென்றார்.  அப்போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய மணிகண்டன் மேலே வரவில்லை.இதையறிந்த, அவரது நண்பர்கள், கிராமத்தினர் மூலமாக மணிகண்டனை தேடிப்பார்த்தனர். ஆனால், மணிகண்டனை கண்டுபிடிக்க  முடியவில்லை.  இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வெங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திருவள்ளூர் - தாமரைப்பாக்கம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி,  வெங்கல்  இன்ஸ்பெக்டர் பத்ம பபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், காலை 9 மணிக்கு திருவூர் மற்றும் திருவள்ளூரில் இருந்து தீயணைப்பு துறையினர் வந்து  ஆற்றில் மூழ்கிய மணிகண்டனை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிற்பகல் 1 மணியளவில் சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>