×

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கூப்பன்கள் வழங்கிய அதிமுகவினர்

தண்டையார்பேட்டை, ஏப்.19: சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 1, 2, 3, 4வது தெரு பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் முத்துச்செல்வன், நரேஷ் குமார் மற்றும் 10க்கும் மேற்பட்டோர், அதிமுக வேட்பாளர் ராஜேஷுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று ரூ.2000 மற்றும் ரூ.10,000 வழங்குவதாக கூப்பன்களை வழங்கினர். தகவலறிந்த அந்த பகுதியை சேர்ந்த திமுக வட்ட செயலாளர் நேதாஜி கணேசன் மற்றும் திமுகவினர் சம்பவ இடத்திற்கு சென்று அதிமுகவினர்களிடையே கூப்பன் வழங்கக் கூடாது என்று கூறினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் தேர்தல் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம், ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளியுங்கள் என்று கூறினர். இச்சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதேபோல் காசிமேடு புதுமனை குப்பத்தில் அதிமுக நிர்வாகிகள் சந்தோஷ், சுரேஷ், சங்கர், மற்றும் பெண்கள் இரண்டு பேர் உள்பட 10 பேர் வீடு வீடாகச் சென்று அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று ரூ.2000 மற்றும் ரூ.10000 செக் வடிவில் கூப்பனை வீடு வீடாக கொடுத்து கொண்டிருந்தனர்.

தகவலறிந்து அந்த பகுதியை சேர்ந்த திமுக வழக்கறிஞர் ஜெயசேகர் மற்றும் திமுகவினர் அதனை தடுத்து, சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரிக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணம் கொண்டு செல்லும்போது உரிய ஆவணம் இல்லை என்றால் உடனடியாக அப்பாவி மக்களை பிடிக்கும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், இதுபோன்ற செயலில் ஈடுபடும் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பினர்.

Tags : AIADMK ,RK Nagar ,Thandaiyarpet ,Muthuchelvan ,Naresh… ,
× RELATED மனைவியுடன் தொடர்பு என சந்தேகம் மகனை வெட்டி கொன்ற தந்தைக்கு ஆயுள் சிறை