க.பரமத்தி வட்டார கல்குவாரிகளில் உரிய ஆவணங்கள், போதிய பராமரிப்பின்றி வாகனங்கள் இயக்கம்

க.பரமத்தி, பிப்.23: க.பரமத்தி வட்டார கல்குவாரிகளில் உரிய ஆவணங்கள் இன்றியும், போதிய பராமரிப்பின்றி வாகனங்கள் இயக்கப்படுவதாகவும், அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்குவாரி பாறைகளில் இருந்து வைடி வைத்து தகர்த்து கற்கள் மற்றும் ஜல்லிகள் வாகனங்கள் மூலம் கிரஷர் செயல்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. க.பரமத்தி சுற்று வட்டாரத்தில் உள்ள கல்குவாரிகள் பல்வேறு இடங்களில் சுமார் ஆயிரம் அடி ஆழம் கொண்டவைகளாக உள்ளது. கல்குவாரிகளில் எடுக்கப்படும் கற்கள் டிப்பர் லாரி, டிராக்டர்கள் மூலம் மேலே கொண்டு வரப்படுகிறது. இப்பகுதியில் உள்ள பல்வேறு குவாரிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் போதிய பராமரிப்பின்றி தினசரி இயக்குவதாக டிரைவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் விபத்து அபாயம் ஏற்படுவதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: க.பரமத்தி ஒன்றிய சுற்று வட்டார பகுதிகளில் செயல்படும் பல்வேறு குவாரிகளில் பயன்படுத்தப்படும் லாரிகள், டிராக்டர்கள் முறையான பராமரிப்பின்றி இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களுக்கு ஆர்சி, இன்சூரன்ஸ், போன்ற ஆவணங்கள் முறையாக இல்லை. மேலும் எப்சி இன்றியே குவாரிகளிலேயே அவற்றை இயக்குவதாக கூறப்படுகிறது. குவாரிகளில் இருந்து கிரஷர் பகுதிக்கு வரும் சாலைகளும் போதிய தரத்தில் இல்லை. இதனால் அளவுக்கு மீறி கற்களை ஏற்றி வரும் வாகனங்கள் போதிய பராமரிப்பு இன்றி இருப்பதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.

மேலும் இவ்வாகனங்களின் பிரேக் முறையாக பராமரிக்காததால் உரிய தரத்தில் இருப்பது இல்லை. இந்த வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ஏதேனும் விபத்து ஏற்பட்டாலும் பாதிக்கப்பட்டவருக்கு உரிய நிவாரணம் பெற முடிவதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குறை கூறுகின்றனர். மேலும் இத்தகைய வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு போதிய அனுபவம் மற்றும் உரிமமும் இருப்பது இல்லை. எப்படியோ வேலைகள் நடந்தால் போதும் என உரிமையாளர்கள் எதையும் கண்டு கொள்ளாமல் அசட்டையாக உள்ளனர்.

இது போன்ற வாகனங்கள் கல்குவாரியை தவிர வேறு எங்கும் இயக்கப்படுவதில்லை. இதனால் இந்த வாகனங்களின் நிலை குறித்து வெளியே ஏதும் தெரிய வருவதில்லை. போக்குவரத்து அதிகாரிகளும் கல்குவாரிகளுக்கு சென்று ஆய்வு செய்வது கிடையாது என டிரைவர்கள் புலம்புகின்றனர். இதனால் தாங்கள் உயிரை பணயம் வைத்து இதில் ஈடுபடுவதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் உரிய பராமரிப்பு, வரி போன்றவை கட்டாமல் இயங்குவதால் தமிழக அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே உடனடியாக கல்வாரிகளில் இயங்கும் வாகனங்களையும், டிரைவர்களையும் சோதனை செய்ய வேண்டும். அவர்களுக்கு உரிய உரிமம் உள்ளதா, மேலும் உள்ளூரை சேர்ந்தவர்களா அல்லது வெளியூரை சேர்ந்தவர்களா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: