ஓசூர் அருகே ஊருக்குள் வந்து செல்லும் கனரக வாகனங்களால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு

ஓசூர், பிப்.23: ஓசூர் அருகே ஊருக்குள் வந்து தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களால், போக்குவரத்து ஸ்தம்பித்து வருவதாக கூறி பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலைகள் மிகவும் குறுகலாக உள்ள நிலையில், தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் வசதிக்காக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் வரும்போது போக்குவரத்து ஸ்தம்பிப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால், ஊருக்குள் பஸ்கள் வருவதை கட்டுப்படுத்தக் கோரி கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்தும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, நேற்று மதியம் தொழிலாளர்களை ஏற்றிச்செல்வதற்காக வந்த தனியார் நிறுவன பஸ்சை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தகவலின் பேரில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, பொதுமக்கள் கூறுகையில், ‘குறுகலான வழித்தடத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்காக, ஷிப்ட் முறையில் ஒரு நாளைக்கு 10க்கும் மேற்பட்ட முறை கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. கனரக வாகனங்கள் வந்து செல்வதால் சாலைகள்  சிதிலமடைவதுடன், குடிநீர் குழாய்கள் உடைந்து பொதுமக்களுக்கு சரியாக குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது. எனவே, கனரக வாகனங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும்,’ என்றனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறினர். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: