போச்சம்பள்ளியில் துணிகரம் ஜி.ஹெச்., வளாகத்தில் சந்தன மரம் வெட்டி கடத்தல்

ோச்சம்பள்ளி, பிப்.23: போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை வளாகத்தில் ₹1.50 லட்சம் மதிப்பிலான சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போச்சம்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனை சுமார் அரை ஏக்கரில் அமைந்துள்ளது. தினசரி 100க்கும் மேற்பட்டோர் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மருத்துவமனை கட்டிடம் உள்ள பகுதியை தவிர, மற்ற இடங்களில் பல்வேறு வகையான மரங்கள் மற்றும் மூலிகை செடிகளை நட்டு பராமரித்து வருகின்றனர். மேலும், அங்கு சந்தன மரங்களும் இயற்கையாகவே வளர்ந்துள்ளன.

அதனை இனம் கண்டு கொண்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்துள்ளனர்.  பின்னர், கையோடு கொண்டு வந்திருந்த நவீன ரம்பத்தால் 5 சந்தன மரங்களை வெட்டியுள்ளனர்.

இதையடுத்து, கொப்புகளை மட்டும் துண்டித்து அங்கேயே போட்டு விட்டு, மரத்துண்டுகளை கடத்திச் சென்றுள்ளனர். மரங்கள் வெட்டப்பட்டதை கண்டு நேற்று மதியம் அந்த பக்கமாக சென்ற ஊழியர்கள் திடுக்கிட்டனர். இது குறித்து விஏஓ சரவணன், போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சந்தன மரங்களை வெட்டி கடத்திய மர்ம கும்பலை தேடி வருகிறார்கள். கடத்தப்பட்ட சந்தன மரத்தின் மதிப்பு சுமார் ₹1.50 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: