தினக்கூலியாக ₹380 கேட்டு குடும்ப அட்டையை ஒப்படைக்க வந்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள்

கிருஷ்ணகிரி, பிப்.23: கிருஷ்ணகிரியில், மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி, குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று  ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் மண்டல செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் திருப்பதி முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி திட்ட தலைவர் சின்னசாமி, திட்ட செயலாளர் முரளி, பொருளாளர் மணி வேல் ஆகியோர் பேசினர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ₹380 வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் முருகன் பேசுகையில், ‘நாங்கள் 8,400 பேர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மின் வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம். கடந்த 22.02.2018 அன்று மின் வாரிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலி ₹380 என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, தினக்கூலியாக ₹380 வழங்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் குடியுரிமை ஒப்படைக்கும் போராட்டத்தை மேற்கொள்கிறோம்,’ என்றார். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர். முன்னதாக ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை ஒப்படைக்க வந்தனர். ஆனால், அவர்களிடம் கோரிக்கை மனுவை மட்டும் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

Related Stories: