2ம் போக சாகுபடிக்காக கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

ஓசூர், பிப்.23: ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வலதுபுற மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில்  2ம் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஓசூர் அருகே கெலவரப்பள்ளியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் இருந்து 2ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, நேற்று அணையிலிருந்து டிஆர்ஓ சதீஷ் தண்ணீர் திறந்து வைத்தார். தண்ணீர் திறப்பால், நீர்த்தேக்கத்தின் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்கள் மூலம் 5,918 ஏக்கரும், வலதுபுற பிரதான கால்வாய் மூலம் 2,082 ஏக்கரும் ஆகமொத்தம் 8 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலம் பாசன வசதி பெறும். ஓசூர் மற்றும் சூளகிரி வட்டத்தில் உள்ள தட்டகானப்பள்ளி, பூதிநத்தம், பெத்தமுத்தாளி, முத்தாளி, அட்டூர், கதிரேப்பள்ளி, மாரசந்திரம், கொத்தூர், மோரனப்பள்ளி, தொரப்பள்ளி, திருச்சிப்பள்ளி, காமன்தொட்டி. தின்னூர், சுபகிரி, கோனோரிப்பள்ளி, சின்னகொல்லூ, பெத்தகொல்லு, சாமனப்பள்ளி, சென்னத்தூர், அட்டக்குறுக்கி, நல்லகான கொத்தப்பள்ளி மற்றும் மார்த்தாண்டப்பள்ளி ஆகிய 22 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவர். 90 நாட்களுக்கு சுழற்சி முறையில் முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்தும், அடுத்த 5 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும் 6 நனைப்புகளுக்கு நீர் வழங்கப்படும். வலது புற பிரதான கால்வாயில் விநாடிக்கு 26 கனஅடி வீதமும், இடது புற பிரதான கால்வாயில் 62 கனஅடி வீதம் என மொத்தம் 88 கன அடி தண்ணீர் திறந்து விடப்படும். விவசாயிகள் நீர் பங்கீட்டில் பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து, நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் ஏமாற்றம்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து கடந்த மாதம் 26ம் தேதியே தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். பல்வேறு காரணங்களை காட்டி நீர் திறப்பு தள்ளி போனதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஜனவரி மாதம் இறுதியில் போகி பட்டத்தில் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தால், தொடர்ச்சியாக 120 நாட்களுக்கு நீராதாரம் கிடைத்திருக்கும். தற்போது, 90 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் விடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாசன காலத்தில் கொத்தமல்லியை தவிர, வேறு எந்த பயிரையும் முழுமையாக பயிரிட்டு அறுவடை செய்ய முடியாது. தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரால் எந்த லாபமும் இல்லை என விவசாயிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.

Related Stories: