டெல்லி: தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தது உச்ச நீதிமன்றம். இது அரசின் கொள்கை சார்ந்த விஷயம், இதில் நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அஜய் கோயல் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது; தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும். வேண்டுமென்றே வாக்களிக்காமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். அவர்கள் அரசு திட்டங்களை பெற தடை விதித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய் மால்யா பக்சி, விபுல் எம்.பாஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இது தொடர்பாக தலைமை நீதிபதி கூறியதாவது: மனுதாரர் கேட்பது கொள்கை முடிவு சார்ந்த விவகாரம். இதில் நீதித்துறை உத்தரவிட முடியாது. நமது நாடு, சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடு. ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட நாடு. ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை 75 ஆண்டுகளாக காண்பித்துள்ளோம்.
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒருசிலர் போகக்கூடாது என்று நினைத்தால், போக மாட்டார்கள். இதில் விழிப்புணர்வுதான் தேவை. யாரையும் வற்புறுத்த முடியாது. வாக்களிக்காமல் இருப்பதை எப்படி குற்றமாக்குவது? அவர்களை கைது செய்ய உத்தரவிட வேண்டுமா? ஒருவர் வாக்களிக்க செல்லாவிட்டால் நாம் என்ன செய்ய முடியும்? அதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. தேர்தல் நாளில் நீதிபதிகள் உள்பட பலருக்கு பணிகள் இருக்கின்றன.
வாக்களிப்பதை கட்டாயமாக்கினால், எனது சக நீதிபதி ஜோய் மால்யா பக்சி, பணிநாளாக இருந்தாலும் வாக்களிக்க மேற்கு வங்காளத்துக்கு செல்ல வேண்டி இருக்கும். நீதித்துறை பணியும் மிக முக்கியமானது. ஒரு ஏழை, தான் வேலைக்கு சென்றால்தான் சம்பளம் கிடைக்கும், நான் எப்படி வாக்களிப்பது என்று கேட்டால், நாம் என்ன சொல்ல முடியும்? என்று கூறியுள்ளார்.
