அரசு ஊழியராக்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தர்மபுரி, பிப்.23: தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் அரசு ஊழியராக்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நேற்று நடத்தினர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் தர்மபுரி மாவட்ட கிளை சார்பில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர் ஆக்கிடக்கோரி காத்திருப்பு போராட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் கவிதா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லில்லிபுஷ்பம், மாவட்ட பொருளாளர் ஈஸ்வரி, மாவட்ட நிர்வாகிகள் தெய்வானை, முருகம்மாள், ராஜம்மாள், சுமதி, தெய்வானை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

சிஐடியூ மாவட்ட செயலாளர் நாகராசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் காலவதி, அங்கம்மாள் ஆகியோர் பேசியதாவது: மத்திய, மாநில அரசுகளின் திட்ட பணிகளை அங்கன்வாடி பணியாளர்கள், கடந்த 37 வருடங்களாக பணியாற்றி வருகின்றனர். அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் சிறப்பு விதி 110ன் கீழ், அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியராக்குவேன் என அறிவித்தார்.

தற்போது ஆட்சியில் உள்ளவர்கள், முன்னாள் முதல்வரின் அறிவிப்பை நிறைவேற்றவில்லை. புதுவையில் அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்கியுள்ளனர். அதே போல், தமிழகத்திலும் அரசு ஊழியராக்க வேண்டும். அகவிலைபடியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வின் போது, பணி கொடையாக ஊழியருக்கு ₹10லட்சம், உதவியாளருக்கு ₹5 லட்சம் வழங்க வேண்டும்.இவ்வாறு ேபசினர்.

Related Stories:

>