சேலம்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை சேலத்தில் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறுவரையறை சட்டத்தினால் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல்காந்தி, கார்கே ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்துள்ளார். இந்த தொகுதி மறுவரையறையை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதன்மூலம் தென்தமிழ்நாட்டில் யாரும் பிரதமர் ஆக முடியாது. வடமாநிலங்களில் இந்துத்துவா அதிகமுள்ள இடங்களில் அதிக தொகுதிகளை உருவாக்கிக்கொள்வார்கள்.
அதே நேரத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆகிய மாநிலங்களின் எண்ணிக்கையை குறைக்கப்படும். இதனால் பாதிக்கப்படுவது தென்மாநிலங்கள் தான். மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு துரோகம் செய்கிறது. தொகுதியை குறைப்பதை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. புரட்சி ஏற்படும். தமிழ்நாடு மக்கள் எல்லோரும் போராடுவார்கள். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒருபோதும் பறிகொடுக்க மாட்டோம். எனவே இந்த புதிய சட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
