3 அடுக்கு மாடி வீடு கட்டி தரப்படும்; மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள்: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு வாக்குறுதி

சென்னை: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் 2வது முறையாக வெற்றி வேட்பாளராக மக்களின் காவலனாக திமுக வேட்பாளர் மயிலை த.வேலு வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்று காலை 171வது வட்டம் பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், ஆஸ்டின் நகர் தெருக்கள், பைகிராப்ட்ஸ் நகர், கணேசபுரம் 5 தெருக்கள், நந்தனம் 14வது தெரு வழியாக மூப்பனார் பாலம் அருகில் உள்ள குடியிருப்புகள் வரை வீடு வீடாகச் சென்று உதயசூரியனுக்கு ஆதரவு திரட்டினார். கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட உங்களுக்கே எங்கள் வாக்குகள் என்று கூறி மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றனர்.

பிரசாரத்தின் போது, வேட்பாளர் மயிலை த.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:
சீனிவாசபுரத்தை பொறுத்தவரை நான் கவுன்சிலராக இருந்த போது 15 ஆண்டுகளாக புதிய வீடுகள் கட்ட முயற்சி செய்தேன். சில பேர் அங்குள்ள மக்களை குழப்பி அதை கணக்கெடுக்க விடாமல் தடுத்தனர். தொடர்ந்து பிரச்னை செய்து வந்தனர். அதை எல்லாம் முறியடித்து 6 மாதத்துக்கு முன்பு வீடுகளை முழுமையாக கணக்கெடுத்து விட்டோம். எல்லா மக்களும் ஒத்துழைத்தனர். கணக்கெடுத்ததில் எத்தனை வீடுகள் உள்ளது என்பது தெரிந்து விட்டது. அதன்படி இப்போது முதல்வர் ஆலோசனையின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடுகள் கட்டுவதற்கான பிளான் தயார் செய்துள்ளனர். எனவே, மீனவர்களுக்கு அங்கு அடுக்கு மாடி கட்டி கொடுப்பேன்.

அதில் எவ்வளவு உயரம் இருந்தாலும் பிரச்னை இல்லை. ஆக்கிரமிப்புதாரர்கள் அங்கு போவதற்கு தயாராக உள்ளனர். மீனவ மக்களுக்கு ஏற்கனவே அங்கு எப்படி கட்டி கொடுக்கப்பட்டிருந்ததோ அதேபோன்றே புதிதாக வீடுகள் கட்டி கொடுங்கள் என்று எங்களுக்கு முதல்வர் உத்தரவாதம் அளித்துள்ளார். மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் செய்து தருவேன். பட்டினப்பாக்கம் பகுதியில் வசிக்கும் மீனவ மக்களுக்கு 3 அடுக்கு மாடி வீடு கட்டித்தரப்படும். மீனவ மக்களை பட்டினப்பாக்கம் பகுதியில் இருந்து எந்த சூழ்நிலையிலும் அகற்றப் போவதில்லை என்ற உறுதியை அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: