சென்னை: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தொகுதி முழுவதும் ஒவ்வொரு நாளும் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். குறிப்பாகத் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் தினமும் வீடு வீடாகச் சென்று பரப்புரையில் ஈடுபட்டு வரும் மா.சுப்பிரமணியன் நேரடியாக மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக உதய சூரியன் சின்னத்தில் திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களும் தொடர்ச்சியாகக் களத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்கள்.
அந்தவகையில், இன்று மா.சுப்பிரமணியனை ஆதரித்து சைதாப்பேட்டை 170அ வட்டத்தில் சிபிஎம் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்தப் பரப்புரையில் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டனர். குறிப்பாகத் திமுக சார்பில் இன்று தொகுதி மறுவரையறை திட்ட நகல் எரிப்புப் போராட்டம் தமிழகம் முழுவதும் முன்னெடுகப்படுகிறது. அந்த அடிப்படையில், சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் மற்றும் சிபிஎம் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பரப்புரைக்கு நடுவே தொகுதி மறுவரையறை திட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தொகுதி மறுவரையறைக்கு எதிராகவும், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குச் சேகரிப்பு நிகழ்வில் திமுக பகுதி செயலாளர் இரா.துரைராஜ், திமுக தொகுதி பார்வையாளர் சைதை சாதிக், திமுக வட்டக் கழக செயலாளர் கோட்டூர் கோ.சண்முகம், காங்கிரஸ் ஜோதிபொன்னம்பலம், விசிக ம.ஜேக்கப், தேமுதிக ஆனந்தன், மநீம கதிர், எஸ்டிபிஐ அபுதாகிர், பிலால், இயூமுலீக் கவுஸ் ஃபேக், தமுமுக சாகுல்ஹமீது, அப்துல் ஜபார், சிபிஐ சிவா, சிபிஎம் வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர்.
