சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இன்று ஒரு கருப்பு தினம் என தெரிவித்தார். திமுக சார்பில் இன்று தொகுதி மறுவரையறை மசோதா நகல் எரிப்புப் போராட்டம் தமிழகம் முழுவதும் முன்னெடுகப்படுகிறது. அந்த அடிப்படையில், சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருப்புச் சட்டை அணிந்து பரப்புரையில் ஈடுபட்டனர். பரப்புரைக்கு நடுவே தொகுதி மறுவரையறை மசோதா நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தொகுதி மறுவரையறைக்கு எதிராகவும், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது, செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இன்று ஒரு கருப்பு தினம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எவ்வளவோ சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த நாடாளுமன்றத்தில் அவசர நாடாளுமன்றத்தைக் கூட்டி மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற போர்வையில், தொகுதி மறுவரையறை செய்யும் சதித் திட்டத்தை மோடி அரசு நிறைவேற்ற முயல்கிறது. மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதில் இந்தியாவில் உள்ள இடதுசாரிகள், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடந்த 10 ஆண்டுகளாகப் போராடிவருகிறோம். மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை 2023லேயே நிறைவேற்றிய போது, அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரினோம். ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலோ அல்லது அதற்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தல்களிலோ அதை அமல்படுத்தாமல் காலம் கடத்திவிட்டு, தற்போது மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தம் செய்வதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமையை, மக்களாட்சி மற்றும் கூட்டாட்சி முறையை சிதைக்கிறார்கள்.
வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் உயரும் அதே வேளையில், தென் மாநிலங்களின் பலம் கணிசமாகக் குறைக்கப்படும். இந்தியாவை வடக்கு தெற்கு எனப் பிரிக்கும் திட்டம் இது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் கண்டன இயக்கங்கள் நடைபெறுகின்றன. தமிழக முதல்வர் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து கருப்பு தினமாக அனுஷ்டித்து, சட்ட நகலை எரித்தும் கருப்புக்கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளோம். இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களிக்கத் தீர்மானித்துள்ளன. எல்லாவற்றையும் மீறி இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தைப் போல ஒரு பிரம்மாண்டமான போராட்டத்தை நாடு சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள 543 இடங்களை 850ஆக உயர்த்வோம் எனச் சொல்லி புதிய மறுவரையறை கொண்டு வருவதற்கு மோடி அரசு முனைந்திருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தற்போதுள்ள 39 தொகுதிகள் உயர்த்தப்படும் என்றும் அது 59ஆக உயரும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். தமிழகத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும் என்று சொல்லும் அவர்கள் ஒட்டுமொத்தமாக 543ஐ 850ஆக உயர்த்தினால், உத்தரப் பிரதேச மாநிலத்தின் தொகுதிகள் எண்ணிக்கை 80லிருந்து 120ஆக உயரும். தற்போது தமிழ்நாட்டிற்கும் உத்தரப் பிரதேசத்திற்கும் இடையே உள்ள 41 இடங்கள் என்ற வித்தியாசம், இந்த மாற்றத்திற்குப் பிறகு 61ஆக அதிகரிக்கும். இதில் அவர்களது சூழ்ச்சியைத் தெரிந்துகொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
