×

பட்டாசு பூமியில் பட்டைய கிளப்ப போவது யார்?

 

தென்மதுரையை ஆண்ட ஹரிகேசரி பராக்கிரம பாண்டியன் காசியில் இருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்து வழிபட்டதால் சிவகாசி என பெயர் பெற்ற நகரம் இது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, குட்டி ஜப்பான் என புகழும் அளவிற்கு சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தொழில் நகரமாக நாடு முழுமைக்கும் அறிமுகமான ஊர். நகரத்திற்குள்ளும் சுற்றுவட்டார கிராமங்களிலும் திரும்பும் திசையெல்லாம் கந்தக பூமியில் விளைந்து நிற்கின்றன பட்டாசு ஆலைகள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலைகளில் நேரடியாக 5 லட்சம் பேரும், மறைமுகமாக 3 லட்சம் பேரும் பணியாற்றும் இந்த ஊரில் வேலையில்லை என்ற குரலே கேட்பதில்லை. ஆண்டுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசு வர்த்தகம் நடக்கிறது. வேறு எங்கும் இல்லாத வகையில் தீபாவளி, பங்குனி பொங்கல் என ஆண்டுக்கு இருமுறை தலா 3 மாத ஊதியம் போனஸாக வழங்கி சிறப்பிக்கின்றன பட்டாசு ஆலைகள். அதற்கு அடுத்தபடியாக காலண்டர், நோட்டுப் புத்தகம், பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணியும் பைண்டிங் பணியும் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை கொடுக்கின்றன.

ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் புரளும் தொழில் இது. சிறுதொழில் புரிவோர், கூலித் தொழிலாளர்கள், சிறுபான்மையினர், வியாபாரிகள் நிறைந்த தொகுதியாகவும் சிவகாசி உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 461 வாக்காளர்கள் உள்ளனர். 1957 முதல் 2006 வரை நடைபெற்ற 12 தேர்தல்களில் காங்கிரஸ், சுதந்திரா கட்சி, திமுக, ஜனதா, அதிமுக, தமாகா, மதிமுக என பல்வேறு கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். 2011 தேர்தலில் முதல்முறையாக களம்கண்ட ராஜேந்திரபாலாஜி, சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் 14,748 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2021 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் அதிமுக வேட்பாளரை சுமார் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றார். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சி காலத்தில் சுமார் 800 கோடி ரூபாய் அளவில் தொகுதி முழுவதிலும் பணிகள் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக சிவகாசி மக்களின் 30 ஆண்டுகால கனவான சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதுபோக, சிவகாசியில் சுற்றுச்சாலை, அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம், ஏராளமான நகர்புற நல்வாழ்வு மையங்கள், ஏராளமான சுகாதார வளாகங்கள், கூடுதல் பள்ளிக்கூடம் கட்டிடங்கள், சாலை வசதிகள், கலைஞர் அறிவு சார் நூலகம், மாநாட்டு அரங்கம், மாநகாட்சிக்கு புதிய கட்டிடம் என பல்வேறு வளர்ச்சி பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆதரவுடன் சிட்டிங் எம்எல்ஏ அசோகன் மேற்கொண்டுள்ளார். இந்த தேர்தலில் சிவகாசி தொகுதியில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, காங்கிரஸ் கட்சி சார்பாக அசோகன் எம்எல்ஏ, நாம் தமிழர் கட்சி சார்பாக டயானா, தமிழக வெற்றிக்கழகம் சார்பாக கீர்த்தனா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். நான்குமுனை போட்டி என்று கூறப்பட்டாலும் திமுக அரசின் ஆதரவுடன் காங்கிரஸ் எம்எல்ஏ அசோகன் செய்துள்ள வளர்ச்சி பணிகள் அவரது வெற்றியை உறுதிப்படுத்தும் என தொகுதி மக்கள் கூறுகின்றனர்.

 

Tags : Sivakasi ,Harikesari Parakrama Pandian ,South Madurai ,Shivalinga ,Kashi ,Jawaharlal Nehru ,Little Japan ,
× RELATED தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராட்டம்!