சுற்றுச்சுவர் இல்லாததால் பகலில் மதுபாராக மாறிய பூங்கா அச்சத்தில் பொதுமக்கள்

மானாமதுரை, பிப்.23:  மானாமதுரை காந்தி சிலை பின்புறம் உள்ள சிறுவர் பூங்காவில் சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் மது அருந்தும் பாராகவும், சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறி வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். மானாமதுரை கீழ்கரை காந்திசிலை பின்புறம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. திமுக ஆட்சி காலத்தில் அருகில் இருந்த காலி இடத்தில் கீழ் ரூ.5 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. பூங்காவில் வடக்கு பகுதியில் சமுதாயக்கூடம், மேற்கு பகுதியில் நூலகம் உள்ளிட்டவை இருப்பதால் தினமும் இந்த பூங்காவில் சிறுவர்களும் அவர்களுக்கு உதவியாக பெரியவர்களும் வந்து சென்றனர். இந்நிலையில் வடக்கு பகுதியில் இருந்த சமுதாயக்கூடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் அந்த கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. கடந்த மாதம் அந்த கட்டிடம் டெண்டர் விடப்பட்டு இடிக்கப்பட்டது. சமுதாய க்கூடத்தில் சுவரை ஒட்டி சிறுவர் பூங்கா இருந்ததால் பூங்காவிற்கென தனியாக சுவர் அமைக்கப்பட வில்லை.

இந்நிலையில் சமுதாயக்கூட சுவர் இடிக்கப்பட்டதால் அங்கு ஏற்பட்ட காலி இடத்தின் வழியாக ஆடு மாடுகள் பகல் நேரங்களில் பூங்காவை சேதப்படுத்தின. இரவு நேரங்களில் மதுகுடிப்போர் மது அருந்தும் பாராக பயன்படுத்தி வருகின்றன. பூங்காவில் மர்ம நபர்கள் நடமாட்டம் காரணமாக சிறுவர்களுடன் வரும் பெண்கள் பூங்காவில் தங்குவதற்கு அச்சமடைந்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் சரவணன் கூறுகையில், ‘சிறுவர் பூங்காவிற்கு மாலை நேரங்களில் மது அருந்துபவர்கள் வருவதால் பெண்கள் குழந்தைகளுடன் வருவதற்கு அச்சமடைந்துள்ளனர். எனவே பூங்காவை பாதுகாக்க சுற்றுச்சுவர் அமைக்கவேண்டும்’ என்றார்.

Related Stories:

>