ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இழப்பீடு தொகை வழங்காமல் இழுத்தடிப்பு

சிவகங்கை, பிப்.23: மாவட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் பள்ளிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் நில எடுப்பு பணி, ஆதிதிராவிடர் மேம்பாடு, உதவித்தொகை வழங்கல், விடுதிப்பணிகள் உள்பட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திதிட்டங்கள் உள்ளிட்டவைகளை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. மாவட்ட அலுவலருக்கு கீழ் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார்கள் பணியாற்றுவர். போலீஸ் ஸ்டேசன்களில் சாதிய வன்கொடுமை வழக்குகளில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டவுடன் பாதிக்கப்பட்ட நபருக்கு(வாதி) ஆதிதிராவிட நலத்துறை சார்பில் முதற்கட்ட இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் இரண்டாம் கட்டமாக இழப்பீடு தொகை வழங்கப்படும். பாதிக்கப்பட்ட நபரின் மறு வாழ்விற்கு உதவும் வகையில் அரசு சார்பில் இந்த உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட சாதிய வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. துறை அலுவலகம் சென்று கேட்பவர்களுக்கு துறை சார்பிலான நிதி ஆண்டுதோறும் மிகக்குறைவாக வழங்கப்படுகிறது. பல்வேறு பணிகளுக்கு இந்த தொகைகள் செலவழிக்கப்படுவதால் நிதி பற்றாக்குறை ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  அவர்கள் கூறியதாவது: எப்போது கேட்டாலும் நிதி இல்லை என கூறுகின்றனர். இத்துறைக்கு பல ஆண்டுகளாக மாவட்ட அலுவலர் நியமனமும் செய்யப்படாததால் நிதி பெறுவதற்கு போதிய முயற்சி இல்லை. பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிக்க செய்யாமல் இழப்பீட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>