பருவ மழை காலங்களில் கடலில் கலக்கும் நீரை சேமிக்க ஆற்றின் குறுக்கே தடுப்பணை விவசாயிகள் வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.23: கோட்டைகரை ஆற்றில் இருந்து மழை காலங்களில் கடலுக்கு வீணாக செல்லும் உபரி நீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் விதமாக ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய கண்மாய் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயாகும். இந்த கண்மாய் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவும், 1,205 மில்லியன் கன அடி கொள்ளளவும், சுமார் 20 கி.மீ நீளமும் கொண்டதாகும். இந்த கண்மாய் நிறைந்தால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல் அருகேயுள்ள 72 சிறு கண்மாய்களும் பாசன வசதி பெறும்.

இந்த பகுதியில் ஆண்டுதோறும் மழை காலங்களில் கண்மாய் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் கோட்டைகரை ஆற்றின் வழியாக வீணாக கடலுக்கு செல்கின்றன. இந்த ஆண்டு பெய்த கனமழையால் ஏராளமான தண்ணீர் கடலுக்கு தான் சென்றது. இதனை தடுத்து விவசாயிகளுக்கு பயன் பெறும் வகையில் சனவேலிகோட்டை கரை ஆற்றின் குறுக்கே ஒரு அணையை கட்டினால் இனிவரும் மழை காலங்களிளாவது கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை சேமிக்கலாம்.

அவ்வாறு சேமித்து வைக்கப்படும் தண்ணீரைக் கொண்டு விவசாயிகள் பயிர் செய்ய ஏதுவாக இருக்கும். விவசாயம் நன்கு செழிப்படையும். இதனால் இப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என்பதில் ஐயமில்லை. எனவே கடந்த காலங்கலில் மழை தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வாழ்ந்த விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மழை காலங்களில் கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை சேமிக்கும் விதமாக அணை கட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் பொதுமக்கள் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல், ஒரு குடம் தண்ணீர் ரூ.5 முதல் 10 வரை வாங்கி பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த ஆண்டு கன மழை பெய்தது. மழை காலங்களில் உபரிநீர் வீணாக கடலுக்கே சென்றடைந்து. அதை தடுத்து நிறுத்தும் விதமாக அரசு உரிய நிதியை ஒதுக்கீடு செய்து தடுப்பணை கட்ட முன்வரவேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: