×

தொகுதி மறுவரையறை செய்வதற்காக நாடாளுமன்ற சிறப்பு அமர்வு இன்று கூடுகிறது: எதிர்க்கட்சிகள் எதிர்த்து வாக்களிக்க முடிவு

புதுடெல்லி: பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறைக்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தின் 3 நாள் சிறப்பு அமர்வு இன்று கூடுகிறது. இதில், தொகுதி மறுவரையறை தொடர்பான பிரிவுகளை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கூட்டாக எதிர்க்க முடிவு செய்துள்ளன. மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க கடந்த 2023ல் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி, வரும் 2034ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போதே பெண்கள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும். இதை திருத்தி, 2029ம் ஆண்டு மக்களவை தேர்தலிலேயே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக அரசியலமைப்பு 131வது திருத்த மசோதா மீது விவாதம் நடத்தி நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் 3 நாள் சிறப்பு அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள தொகுதி மறுவரையறை தொடர்பான பிரிவுகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படுவதால், மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று கூடுகிறது. இதில், தொகுதி மறுவரையறை பிரிவுகளுக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்துள்ளன. இதுதொடர்பான விவாதங்களின் போது அவையில் கடும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, மசோதாக்கள் குறித்து விவாதித்து கூட்டு உத்தியை வகுப்பதற்காக முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நேற்று மாலை கூடி பேசினர். இதில், கார்கே, ராகுல் காந்தியுடன் திமுக எம்பி டி.ஆர்.பாலு, ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரசின் சாகாரிகா கோஷ், சிவசேனாவின் சஞ்சய் ராவத், அரவிந்த் சாவந்த், தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் வீடியோன கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டார்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, ‘‘பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால் இம்மசோதாவில் கொண்டு வரப்பட உள்ள அரசியல் உள்நோக்கம் கொண்ட சில பிரிவுகளை மட்டும் நாங்கள் எதிர்க்கிறோம். சர்ச்சைக்குரிய தொகுதி மறுவரையறை தொடர்பான பிரிவுகளை எதிர்த்து ஒருங்கிணைந்து வாக்களிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. 2029ம் ஆண்டில் நடைபெற உள்ள அடுத்த மக்களவை தேர்தலில் தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையில் பெண்கள் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் விரும்புகின்றன’’ என்றார்.

* எத்தனை வாக்குகள்?
அரசியலமைப்பு 131வது திருத்தத்தின் மூலம் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543ல் இருந்து 850 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3ல் 1 பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இதற்கான அரசியலமைப்பை திருத்துவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு பெரும்பான்மை தேவை. அதாவது, அவையின் மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களின் ஆதரவும், அவையில் வருகை தந்து வாக்களிக்கும் எம்பிக்களில் 3ல் 2 பங்கு பெரும்பான்மையும் இரண்டும் வேண்டும். மக்களவையில் 540 எம்பிக்களும் வருகை தந்து வாக்களித்தால் 3ல் 2 பங்கு பெரும்பான்மைக்கான எண்ணிக்கை 360 ஆகும். தற்போது மக்களவையில் என்டிஏ கூட்டணியின் பலம் 292 ஆக உள்ளது. முக்கிய எதிர்க்கட்சிகள் மொத்தம் 233 எம்பிக்களை கொண்டுள்ளன.

Tags : Parliament ,New Delhi ,Lok Sabha… ,
× RELATED தொகுதி மறுவரையறை மசோதாவை...