- கர்நாடக
- முதல் அமைச்சர்
- பெங்களூரு
- தாவணகெரே தெற்கு
- சமர்த் ஷமனூர்
- சுரங்க அமைச்சர்
- எஸ்.எஸ். மல்லிகார்ஜுன்
- சட்டமன்ற உறுப்பினர்
- ஷமனூர் சிவசங்கரப்பா
- காங்கிரஸ் கட்சி
பெங்களூரு: கர்நாடக மாநிலம் தாவணகெரே சவுத் சட்டசபை தொகுதிக்கு கடந்த 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுரங்கத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.மல்லிகார்ஜுனின் மகனும், மறைந்த மூத்த எம்.எல்.ஏ. ஷாமனூர் சிவசங்கரப்பாவின் பேரனுமான சமர்த் ஷாமனூர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அந்த தொகுதியில் கணிசமான அளவில் சிறுபான்மையினர் வசிப்பதால், அங்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சீட் வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஜமீர் அகமது கான் உள்ளிட்ட தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். கடந்த மார்ச் 20ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், ‘முஸ்லிம் சமூகத்தில் யாருக்காவது வாய்ப்பு கொடுங்கள்’ என்று ஜமீர் அகமது கான் பகிரங்கமாக கோரிக்கை வைத்தார்.
இந்த விவகாரத்தில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக காங்கிரஸ் பார்வையாளர் அபிஷேக் தத் தலைமைக்கு அறிக்கை அளித்தார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 11ம் தேதி சிறுபான்மை பிரிவு தலைவர் பதவியை அப்துல் ஜப்பார் ராஜினாமா செய்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், முதல்வர் சித்தராமையா தனது அரசியல் செயலாளர் நசீர் அகமதுவை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘மேலவை உறுப்பினரான நசீர் அகமது, முதல்வரின் அரசியல் செயலாளர் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்று அமைச்சர் பி.இசட்.ஜமீர் அகமது கானை தனது இல்லத்திற்கு வரவழைத்த முதல்வர், கட்சிக்குள் கிளர்ச்சியை தூண்டியதாக அவர் மீது எழுந்த புகார்கள் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போது தனது செயலை நியாயப்படுத்திய அமைச்சர் ஜமீர் அகமது கான், ‘முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு சீட் கேட்டது உண்மைதான். ஆனால் ஜப்பாரைத் தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் சீட் கொடுங்கள் என்றுதான் கூறினேன். தலைமை முடிவெடுத்த பிறகு அதற்கு கட்டுப்பட்டு நடந்தேன்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மும்பையில் இருந்தேனே தவிர, கட்சிக்கு எதிராக வேலை செய்யவில்லை. தாவணகெரேயில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்’ என்று கூறினார். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ‘கட்சியில் கட்டுப்பாடு இல்லையென்றால் எதையும் செய்ய முடியாது, தலைமையின் அறிக்கையின் அடிப்படையிலேயே முதல்வர் இந்த முடிவை எடுத்துள்ளார்’ என்று கூறினார்.
