உயர் மின்கோபுரத்தில் ஏறி விவசாயிகள் தற்கொலை மிரட்டல் திருவண்ணாமலை அருகே பரபரப்பு விளை நிலத்தில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து

திருவண்ணாமலை, பிப்.21: திருவண்ணாமலை அருகே விளை நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மின் கம்பத்தில் ஏறி விவசாயிகள் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. அதனால், விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தை கைவிடக்கோரி, தொடர் போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை. விவசாயிகளை அச்சுறுத்தி, அத்துமீறி தொடர்ந்து விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடும் வழங்கவில்லை. முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, இழப்பீடு தொகை நிர்ணயிப்பதில்லை. எனவே, விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த மங்கலம் மேல்பாலானந்தல் கிராமத்தில் நேற்று பவர் கிரிட் நிறுவனத்தினர், விளை நிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க லாரிகளில் பொருட்களை கொண்டு சென்றனர். மேலும், விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மின் கோபுரம் அமைக்க முயன்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள், பொருட்கள் ஏற்றிவந்த லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், விளை நிலங்களில் திரண்டு நின்று, மின் கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும், திட்டமிட்டபடி மின் கோபுரங்கள் அமைக்கப்படும் என தெரிவித்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது, விவசாயி அசோக்குமார் அவரது தாய் சரசு, உறவினர்கள் வேலாயுதம், மணிவண்ணன் ஆகியோர், அந்த பகுதியில் ஏற்கனவே அமைத்திருந்த உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ‘விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைத்தால் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வோம்’ என தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, மங்கலம் போலீசார் மற்றும் பவர் கிரிட் நிறுவன ஊழியர்கள் அங்கு வந்தனர்.

மின் கம்பங்களை ஏற்றி வந்த லாரியை அங்கிருந்து திருப்பி அனுப்பினர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உயர்மின் கோபுரம் அமைக்கும் நிலத்தின் வழிகாட்டு மதிப்புக்கு தகுந்தபடி இழப்பீடு உடனடியாக வழங்கப்படும் என உறுதியளித்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு, மின் கோபுரங்களில் இருந்து விவசாயிகள் கீழே இறங்கினர். ‘பேச்சுவார்த்தையில் தெரிவித்தபடி நியாயமான இழப்்பீடு உடனடியாக வழங்காவிட்டால், இந்த பகுதியில் மின் கோபுரங்கள் அமைக்க அனுமதிக்க மாட்டோம்’ என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். திருவண்ணாமலை அடுத்த மங்கலம் மேல்பாலானந்தல் கிராமத்தில், விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அருகே உள்ள மற்றொரு மின் கோபுரத்தில் ஏறி நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Related Stories: