விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் உள்ள தவெக தேர்தல் அலுவலகத்தில் காலணி அணிந்து செல்ல தடை: புனிதமான இடம் என கட்சியினர் கூறியதால் பொதுமக்கள் அதிருப்தி

பெரம்பூர்: விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் உள்ள தவெக தேர்தல் தலைமை அலுவலகத்தில் காலணி அணிந்து உள்ளே செல்ல அனுமதி இல்லை, என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ள நிலையில், ‘புனிதமான இடம்’ என்று அக்கட்சியினர் விளக்கத்தால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பிரசாரம் செய்வார் என்பதால் பல லட்சம் செலவு செய்து பிரபல ஆர்ட் டைரக்டரை வைத்து இரண்டு குளு.. குளு.. அறைகளுடனான தேர்தல் தலைமை அலுவலகம் கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் அமைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை பெரம்பூரில்‌ பிரசாரத்தை தொடங்கும் போது விஜய் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் திறந்து வைக்காததால் பல நாட்களாக யாரும் பயன்படுத்தாமல் பூட்டிக்கிடந்தது.

தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் விஜய் வருகைக்காக காத்திருந்த மாவட்ட தலைவர் சிவா சில தினங்களுக்கு முன் அலுவலகத்தை திறந்து தேர்தல் பணிகளை தொடங்கினார். தவெக தலைவர் விஜய்க்காக அமைக்கப்பட்ட தலைமை அலுவலகம் என்பதால் அது புனிதமான இடம் என்றும், காலணி அணிந்து உள்ளே செல்ல அனுமதி இல்லை என அலுவலக நுழைவாயலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட அறைகளில் மாவட்ட தலைவர் சிவா மற்றும் அவரது நண்பர்கள் அவ்வப்போது வந்து தேர்தல் பணிகளை பார்வையிடுகின்றனர். மற்றவர்கள்‌ சூடு தாங்க முடியாமல் வேர்வையை துடைத்தபடி வரவேற்பாளர் அறையில் அமர்ந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தவெகவினர் இந்த செயல் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Related Stories: