செலவினங்களை கட்டுப்படுத்த பயிர்களுக்கு ஆர்கானிக் உரங்கள்

*வேளாண் துறையினர் அறிவுறுத்தல்

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு தொழு உரம் மற்றும் மண்புழு உரமிடுவதால் நோய் தாக்குதல் மற்றும் செலவினங்களை கட்டுப்படுத்தலாம் என வேளாண்மைத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

தேவதானப்பட்டி பகுதியில், மேல்மங்கலம், ஜெயமங்கலம், அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, நாகம்பட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், அ.வாடிப்பட்டி, மருகால்பட்டி ஆகிய பகுதியில் உள்ள விளைநிலங்கள் பெரியகுளம் வராகநதி ஆற்றுப்பாசனம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.

இதே போல் தேவதானப்பட்டி, டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, செங்குளத்துப்பட்டி, சாத்தாகோவில்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் மஞ்சளாறு அணை ஆற்றுப்பாசனம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.

பருவமழைக் காலங்களில் நல்லகருப்பன்பட்டி நாரணன்குளம் கண்மாய், சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய், ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய், பொம்மிநாயக்கன்பட்டி கண்மாய், குள்ளப்புரம் கண்மாய், செங்குளத்துப்பட்டி செங்குளம் கண்மாய், கெங்குவார்பட்டி மத்துவார்குளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய் பாசன பரப்புகள் மற்றும் நேரடி ஆற்றுப்பாசன வசதி பெறும் இடங்களில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இது தவிர கிணற்றுப்பாசனம் மூலம் புஞ்சை நிலங்களில் பருத்தி, மக்காச்சோளம், வாழை, முருங்கை, கரும்பு, வெண்டை, தக்காளி, சாம்பார் பூசணி, கத்தரி, பீட்ரூட், காளிபிளவர், கொத்தமல்லி, முருங்கை பீன்ஸ், மற்றும் பூ வகைகளான சம்பங்கி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மானாவாரி நிலங்களில் நிலக்கடலை, சோளம், கம்பு, தட்டைபயறு, பாசிப்பயறு, மொச்சை, எள், இறுங்குசோளம், நாட்டுசோளம் உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிர் சாகுபடி நிலங்களில் பயிர்களுக்கு களையெடுப்பு, உரமிடுதல், மருந்து தெளித்தல் ஆகிய வேலைகளை விவசாயிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பயிர்களுக்கு தேவையான ஆலோசனைகளுடன் தொழு உரம், ஆட்டு சானம், கிடை மாட்டு தொழு உரம் மற்றும் மண் புழு உரம் ஆகியவற்றை பயிர்களுக்கு இட வேண்டும் என வேளாண்மைத்துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். சாகுபடி பயிர்களுக்கு ரசாயன உரமிடுதலால் மண் வளம் பாதிப்பு ஏற்படும். மேலும் பயிர்களுக்கு பூச்சி தாக்குதலை உண்டாக்கும்.

ரசாயன உரத்தினால் மண்ணில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகள் இறக்க நேரிடும். பயிர் சாகுபடியில் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு அதிகளவு செலவு ஏற்படுகிறது. அதிக செலவு செய்து பயிர்களுக்கும், மண்ணிற்கும், அதை பயன்படுத்தும் விவசாயிகளுக்கும் தீமைகள்தான ஏற்படுகிறது.

அதே சமயத்தில் மாட்டுச்சானம், கிடைமாட்டுச்சானம், ஆட்டுச்சானம் இட்டு நிலத்தை உழவு செய்து பின்னர் பயிர் சாகுபடி செய்தால் மண் வளம் பாதுகாக்கப்படும். தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு மண்புழு உரம், ஆர்கானிக் உரமிடுவதால் பயிர்கள் பாதுகாக்கப்படுகிறது.

சாகுபடி பயிர்களுக்கு பூச்சி தாக்குதல், பயிர் போதிய வளர்ச்சி இல்லாமை, குறைந்தளவு பூ பூத்தல், குறைந்தளவு மகசூல் உள்ளிட்டவைகளால் விவசாயிகள் அதிகளவு செலவு செய்து, ரசாயன மருந்துகளை தெளிக்கின்றனர்.

மேலும் அதிக செலவு செய்து ரசாயன மருந்து தெளித்து குறைந்தளவு மகசூலை எடுப்பதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ஆகையால் விவசாயிகள் பயிர்களுக்கு மண்புழு உரம் பயன்படுத்துதல், பஞ்சகாவ்யம் தெளிப்புமுறை பற்றி வேளாண்மைத்துறையினரின் ஆலோசனைகளை பெற்று விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: