புகையிலை பொருட்கள் விற்ற 13 பேர் கைது

புதுச்சேரி, பிப். 21: புதுச்சேரியில் போலீசார் 2வது நாளாக நடத்திய அதிரடி சோதனையில் பள்ளி, கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர்.பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 100 அடி தொலைவுக்குள் பீடி, சிகரெட் மற்றும் தடை செய்யப்பட்ட பான்மசாலா, பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை, போதை பொருட்களை விற்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி பெட்டிக்கடைகளில் இவை விற்கப்படுவதாக புகார் வந்ததையடுத்து நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவிட்டார். அதன்பேரில் கடந்த 19ம் தேதி புதுவை முழுவதும் பெட்டிக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தி புகையிலை மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். 15 வியாபாரிகளை கைது செய்தனர்.அதனை தொடர்ந்து 2வது நாளாக நேற்று முன்தினமும் அதிரடி சோதனை நடத்தி புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 13 வியாபாரிகளையும் கைது செய்தனர். அதன்படி, கதிர்காமம் வழுதாவூர் ரோட்டில் அரசு பள்ளி எதிரே புகையிலை பொருட்கள் விற்ற கதிர்காமம் ஆனந்தா நகரை சேர்ந்த அருள்குமாரை (30) கோரிமேடு எஸ்ஐ இனியன் கைது செய்தார். அதேபோல், மேட்டுப்பாளையம் பிப்டிக் ரோடு சந்திப்பில் புகையிலை பொருட்கள் விற்ற முத்திரையர்பாளையம் கோவிந்தன்பேட்டையை சேர்ந்த அண்ணாதுரையை (59) மேட்டுப்பாளையம் ஏஎஸ்ஐ பக்தவச்சலம் கைது செய்தார். அவரிடம் இருந்து ரூ.1500 மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகரில் பள்ளி அருகே புகையிலை போதை பொருட்கள் விற்ற அதே பகுதியை சேர்ந்த மாணிக்கத்தை (58) ரெட்டியார்பாளையம் எஸ்ஐ வீரபுத்திரன் கைது செய்தார். அவரிடமிருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. செஞ்சி சாலையில் அண்ணா நகரை சேர்ந்த ஜனார்த்தனன் (52), காந்தி வீதியில் கோவிந்தசாலையை சேர்ந்த ராஜா என்ற சோழன் (39) ஆகியோர் புகையிலை பொருட்கள் விற்றதாக பெரியகடை எஸ்ஐக்கள் முருகன், சண்முகப்பிரியா ஆகியோரால் கைது செய்யப்பட்டனர்.

வாழைக்குளம் அக்காசாமி மடம் வீதியில் அதே பகுதியை சேர்ந்த சம்பத் (34) என்பவரை போதை பாக்கு விற்றதாக முத்தியால்பேட்டை எஸ்ஐ ரமேஷ் கைது செய்தார். அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. காலாப்பட்டு பல்கலைக்கழக 2வது நுழைவு வாயில் எதிரே போதை பாக்கு விற்ற அதே பகுதியை சேர்ந்த அங்கப்பனை (50) காலாப்பட்டு எஸ்ஐ சிவப்பிரகாசம் கைது செய்தார். அவரிடமிருந்து ரூ.550 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குயவர்பாளையம் திருவள்ளுவர் சாலையில் விற்ற ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகரை சேர்ந்த ராமச்சந்திரனை (61) உருளையன்பேட்டை எஸ்ஐ கட்ட சுப்பராஜு கைது செய்தார். அவரிடமிருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. லெனின் வீதியில் பள்ளி அருகே போதை பாக்கு விற்ற வேல்முருகன் நகரை சேர்ந்த ராஜாவை (56) உருளையன்பேட்டை எஸ்ஐ வெங்கடாஜலபதி கைது செய்தார். ரூ.1500 மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

புஸ்சி வீதியில் விற்ற தட்டாஞ்சாவடி சுப்பையா நகரை சேர்ந்த சசிந்தரனை (58) ஒதியஞ்சாலை எஸ்ஐ பிரபு கைது செய்தார். அவரிடமிருந்து ரூ.3640 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சவரிராயலு வீதியில் முதலியார்பேட்டை விடுதலை நகரை சேர்ந்த அரிகிருஷ்ணனை (52) என்பவர் போதை பாக்கு விற்றதாக ஒதியஞ்சாலை எஸ்ஐ பெரியசாமி கைது செய்தார். அவரிடம் இருந்து ரூ.1700 மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கல்மண்டபத்தில் ஞானபதிலால் (34) என்பவரும், காட்டேரிகுப்பம் சுகர் மில் ரோட்டில் கிருஷ்ணமூர்த்தி (52) என்பவரும் போதை பாக்கு விற்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Related Stories:

>