நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்

விழுப்புரம், பிப். 21:  விழுப்புரம் வருவாய் கோட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். விழுப்புரம், வானூர், கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி தாலுகாவுக்குட்பட்ட கோட்டஅளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் வருவாய்கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் வேல்முருகன், ராணி, பாலமுருகன், வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசியதாவது: தோட்டக்கலைத்துறையில் நீண்டகாலமாக துணை இயக்குநர் பணியிடம் பூர்த்தி செய்யாமல் இருக்கிறது. கடலூர் அதிகாரி ஒருவரே மூன்று மாவட்டங்களுக்கும் பொறுப்பு வகிப்பதால் விதைகள், மானியம் உள்ளிட்ட தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் விவசாயிகளுக்கு விரைந்து கிடைப்பதில்லை. எனவே இப்பணியிடத்தை பூர்த்திசெய்யவேண்டும். மாடித்தோட்ட காய்கறித்திட்டத்தில் விதைகளை வழங்கவும், உழவன்ஆப்பிள் விதைகளின் இருப்புவிவரங்களை தெரிந்துகொள்ளவும் தோட்டக்கலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். விழுப்புரம் நகரில் பன்றிகள் தொல்லையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வி.மருதூர் சுற்றுவட்டாரப்பகுதிகள், கே.கே ரோடு பகுதியில் சாலைகளில் பன்றிகள் சுற்றித்திரிவதால் சுகாதார சீர்கேடும், துர்நாற்றமும் ஏற்படுகிறது. நகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து பன்றிகளை கட்டுப்படுத்தவேண்டும். மேலும், ஜனவரி துவக்கத்திலிருந்தே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டுமென கூறி வந்தோம். ஆனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர். நெல் அறுவடைகாலம் முடியும் நிலையில் தற்போது 7 இடங்களில் திறந்து 700 டன் கொள்முதல் செய்துள்ளனர்.

பக்கத்திலுள்ள கடலூர் மாவட்டத்தில் 97 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் காலதாமதமாக திறக்கப்பட்டதால் விவசாயிகள் மார்க்கெட் கமிட்டியில் குறைந்தவிலைக்கு நெல்விற்பனை ய்துள்ளனர்.நேரடிநெல்கொள்முதல் நிலையங்களில் ரூ.1,500க்கு விலைபோன அதே நெல், மார்க்கெட் கமிட்டியில் ரூ.1,100க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இடைத்தரகர்கள் ஆதிக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். மேலும், செஞ்சி, திருக்கோவிலூர் பகுதியில் இரண்டுநாட்களுக்கு ஒருமுறை மார்க்கெட் கமிட்டியில் இடவசதியில்லாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். வருங்காங்களில் இதனை தடுக்க, முன்கூட்டியே நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவேண்டும். ஊரகவளர்ச்சித்துறையின் கீழ்உள்ள ஏரிகளில் குடிமராமத்து திட்டப்பணிகள் செய்யப்படுகிறது. ஆனால், ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை. இதேபோல், பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ராதாபுரம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பலமுறை மனு கொடுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றிட வேண்டும். பட்டாமாற்றம் தொடர்பாக தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பங்கள் குவிந்து கிடக்கிறது. இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். பயிர் கடன் வழங்க கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகள் வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து பேசிய, வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன், விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் மீது உரிய தீர்வு காண வேண்டுமென துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: