கேத்தி பாலாடா பகுதியில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்காத 4 கேரட் கழுவும் இயந்திரங்களுக்கு சீல்

குன்னூர்,பிப்.21:குன்னூர் அருகே உள்ள கேத்தி பாலாடா பகுதியில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்காத 4 கேரட் கழுவும் இயந்திரங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் தோட்ட தொழிலில் தேயிலைக்கு அடுத்தபடியாக  அதிகளவில் மலைக்காய்கறிகளான கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்காக சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி,பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதால் இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.  . கடந்த 10 ஆண்டுக்கு முன் கேரட்டைச் சுத்தம் செய்வதற்கு சுத்திகரிப்பு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஊட்டி, கேத்தி பாலாடா, முத்தொரை ஆகிய பகுதிகளில் அதிக அளவில் இயந்திரங்கள் நிறுவப்பட்டன.

அனைத்து விவசாயிகளும், தாங்கள் விளைவித்த கேரட்டை இயந்திரங்களில் மட்டுமே சுத்திகரித்து, தரம் பிரித்து சந்தைக்கு அனுப்பி வந்தனர்.பெரும்பாலான இயந்திரங்கள் ஆறு மற்றும் ஓடைகளின் கரையில் அமைக்கப்பட்டிருப்பதால், அதிக அளவில் நீர் பயன்டுத்தப்பட்டு வந்தது. மேலும், கேரட் கழுவிய கழிவுநீர் நேரடியாக ஓடையில் கலந்ததால் நீர் நிலைகள் மாசடைந்ததோடு, தடுப்பணைகளில் சேறு நிரம்பியது. இந்நிலையில் கேத்தி பாலாடா பகுதியில்  நீர் மாசுபாடு ஏற்படுவதாக கூறியும், கேரட் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த தவறிய நான்கு இயந்திரங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் இப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்த கேரட்டை சுத்தம் செய்து தரம் பிரிக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர்.

Related Stories: