கழிவு நீரை வெளியேற்றிய சாய ஆலைகளுக்கு ரூ.2.17 கோடி அபராதம் விதிப்பு அதிகாரிகள் தகவல்

ஈரோடு, பிப். 21:   ஈரோட்டில்  கழிவு நீரை வெளியேற்றிய சாய ஆலைகளுக்கு கடந்த 7 மாதங்களில் மட்டும்  ரூ.2.17 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய, சலவை மற்றும்  தோல் தொழிற்சாலைகள் கழிவு நீரை காவிரி ஆற்றிலும், காலிங்கராயன்  வாய்க்காலிலும் திறந்துவிடுவதால், நீர்நிலைகள் மாசுபடிந்து வருகிறது. இந்நிலையில் வெண்டிபாளையம் பகுதியில் கழிவு நீரை வெளியேற்றிய 30 சாய, சலவை  ஆலைகளுக்கு மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த ஆலைகள்  பல ஆண்டுகளாக சலவை ஆலைகள் என்ற பெயரில் சாய ஆலைகளாக செயல்பட்டு வந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த தகவல் மாசுகட்டுப்பாடு வாரிய  அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து  வந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்நிலையில், ஈரோடு  சுற்றுவட்டார பகுதிகளில் விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டு வந்த ஆலைகள் மீது  மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,  கடந்த 7 மாதங்களில் மட்டும் 80 ஆலைகள் மூடப்பட்டு சம்பந்தப்பட்ட ஆலைகளுக்கு  ரூ.2 கோடியே 17 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாசுகட்டுப்பாடு  வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: