சித்தோடு மார்க்கெட்டில் வெல்லம் விலை சரிவு

ஈரோடு, பிப். 21:  சித்தோடு வெல்ல மார்க்கெட்டில் வெல்லத்தின் விலை சரிவால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று வெல்லம் மார்க்கெட் கூடும். இந்த மார்க்கெட்டில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதியில் கரும்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம் போன்றவை 30 கிலோ சிப்பமாக கொண்டு வந்து, ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும். இதன்படி, நேற்று கூடிய மார்க்கெட்டில் நாட்டு சர்க்கரை 2,900 மூட்டையும், உருண்டை வெல்லம் 4,500 மூட்டையும், அச்சு வெல்லம் 800 மூட்டையும் வரத்தானது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் வெல்லத்தின் வரத்து சற்று குறைந்திருந்தது. இதில், இந்த வாரம் நாட்டுச்சர்க்கரை சிப்பம் ரூ.950 முதல் ரூ.1,050 வரையும், உருண்டை வெல்லம் ரூ.950 முதல் ரூ.1,080 வரையும், அச்சு வெல்லம் ரூ.1,050 முதல் ரூ.1,120 வரை விற்பனையானது. இந்த வாரம் வெல்லம் மூட்டைக்கு ரூ.60 வரை விலை சரிவடைந்துள்ளது. இதனால், உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளதாக வெல்ல மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: