கால்நடை மருத்துவக்கல்லூரி திறப்பு

சேலம், பிப். 21: சேலம் மாவட்டம் தலைவாசலில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை, நாளை (22ம் தேதி) முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோட்டில், ஆசியாவிலேயே மிக பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் விலங்கின ஆராய்ச்சி நிலையம் அமைகிறது. இந்த வளாகத்திலேயே, 73.80 ஏக்கரில், ₹118 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தின் 5வது கால்நடை மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டுள்ளது. கல்லூரிக்கான நிர்வாக அலுவலக கட்டிடம், கல்விசார் வளாகம், நூலகக்கட்டிடம், விடுதி, இறைச்சி அறிவியல், பால் அறிவியல், கால்நடைப்பண்ணை வளாகம், விருந்தினர் மாளிகை, உணவகம், கால்நடை மருத்துவமனை என 3.75 லட்சம் சதுரடி பரப்பில், கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இவற்றின் திறப்பு விழா நாளை மதியம் 12.30 மணிக்கு நடக்கிறது. கல்லூரி வளாகத்தில் நடக்கும் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, கால்நடை பாரமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, கல்லூரியை திறந்து வைத்து பேசுகிறார். மேலும், பல்வேறு துறை சார்பில் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கால்நடை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: