கொரோனா தடுப்பூசி போட தயங்கும் நகராட்சி ஊழியர்கள்

நாமக்கல், பிப்.21: நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி, பேரூராட்சியில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணி துவங்கி ஒரு மாதமாகியும், முன்கள பணியாளர்களிடம் தடுப்பூசி போட தயக்கம் நிலவுகிறது. நாமக்கல் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்பட மொத்தம் 550 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட பட்டியல் தயாரிக்கப்பட்டு, எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், 2 வாரமாகியும் இதுவரை நாமக்கல் நகராட்சியில் பணியாற்றும் 8 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். மற்றவர்கள் ஊசி போட தயக்கம் காட்டுகின்றனர். எர்ணாபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களான திண்டமங்கலம் மற்றும் கோனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று தடுப்பூசி போடப்பட்டது. ஆயுஷ் மருத்துவ அலுவலர் பூபதிராஜா, கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்லம், சுகாதார ஆய்வாளர்கள் முகமதாபி, ராஜகணபதி ஆகியோரும் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.

Related Stories: