கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகம் திறப்பு

ராசிபுரம், பிப்.21: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ₹25 லட்சம் மதிப்பீட்டில் நிர்வாக அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்து, அமைச்சர் தங்கமணி பேசியது: தமிழக அரசு ₹12 ஆயிரத்து 110 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளதால் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் 57,419 விவசாயிகளும், ராசிபுரம் தொகுதியில் மட்டும் 12,230 விவசாயிகளுக்கு ₹110 கோடியே 56 லட்சம் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் கடந்த 30 ஆண்டுகளாக லாபத்தில் இயங்குகிறது. நாமகிரிப்பேட்டையில் ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட மஞ்சள் குடோன் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடோன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், அமைச்சர் சரோஜா, நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம், ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் பொன்னுசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மிருனாளினி, துணைப் பதிவாளர்கள் கர்ணன், பாலசுப்ரமணியன், ராசிபுரம் கூட்டுறவு நகர வங்கித் தலைவர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: