இதுதான் விஜய்யின் காரைக்குடி டூர்: லேட்டா பிரசாரத்துக்கு வந்தாரு… சைக்கிள் ஓட்டி படம் காட்டி தடுமாறினாரு; டாடா காட்டிட்டு பேசாம போயிட்டாரு… ஒரே ரெக்கார்டை போடுவதால் பேச்சை தவிர்க்க புது டெக்னிக்

சிவகங்கை மாவட்டத்தில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தவெக தலைவர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று காலை 10 மணியளவில் மதுரை வந்தார். அங்கிருந்து பிரசார வேன் மூலம் மூலம் மதுரை ரிங்ரோடு, மேலூர், திருப்பத்தூர் வழியாக காரைக்குடி சென்றார். வழக்கம்போல் விஜய் பிரசார வேனை ஏராளமானோர் டூவீலர்களில் வேனை பின்தொடர்ந்தனர். மண்டேலா நகர் பிரிவு அருகே வேனை பின்தொடர்ந்து வந்து தொண்டரின் டூவீலர் விஜய் பிரசார வேனின் பக்கவாட்டில் மோதி தடுமாறிய நிலையில் சென்டர்மீடியன் மீது மோதி கீழே விழுந்தது.

இதில் அந்த டூவீலரில் இருந்த வாலிபர் படுகாயமடைந்தார். மதுரை ரிங்ரோடு பகுதியில் தொண்டர்கள் உள்ளே புகுந்தபோது விஜய் பாதுகாப்பு வாகனத்தின் கண்ணாடி உடைந்து சேதமானது. நரசிங்கம்பட்டி அருகே காத்திருந்த ஒரு பிரிவினர், திடீரென வேனை மறித்து சென்றபோது ஒரு பெண் தவறி கீழே விழுந்தார். இதேபோல் மேலூர் சுற்றுச்சாலை பகுதியில் விஜய்யின் பிரசார வேனை பின்தொடர்ந்து வந்த டூவீலர்கள் மோதி கீழே சாய்ந்ததில் இருவர் காயமடைந்தனர். தொடர்ந்து சிவகங்கை எல்லை வந்ததும், பிள்ளையார்பட்டி மற்றும் குன்றக்குடியிலும் ரசிகர்கள் பின்தொடர்ந்து வந்தனர்.

காரைக்குடிக்கு உள்ளே விஜய்யின் வாகனம் நுழைந்தபோது வேனில் இருந்து விஜய் வெளியே வந்து கையசைத்தார். பின்னர், வாட்டர் டேங்க் வழியாக இன்கம்டேக்ஸ் சாலையில் விஜய் வாகனம் வந்தபோது வாகனத்தை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டனர். திடீரென வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய விஜய், ரசிகர் ஒருவரின் சைக்கிளை வாங்கி 50 மீட்டர் தூரத்துக்கு ஓட்டினார். விஜய் சைக்கிளில் வந்தபோது திடீரென தடுமாறி கீழே விழ பார்த்தார். உடனடியாக சுதாரித்த பவுன்சர்கள் அவரை கீழே விழாமல் தடுத்து கூட்டத்தில் இருந்து மீட்டு வேனில் ஏற்றினர்.

இதையெல்லாம் முடித்து அவர் தேர்தல் பிரசாரம் நடக்க இருந்த இடத்திற்கு வந்தபோது மணி பிற்பகல் 2.35. பிரசாரத்துக்கு அனுமதித்த நேரம் 12 – 2.30 மணி என்பதால் அங்கு விஜய்யால் பேச முடியவில்லை. இதையடுத்து தொண்டர்களை பார்த்து ஒன்றும் பேசாமல் கைகளை மட்டும் அசைத்து விட்டு 5 நிமிடம் கூட நிற்காமல் உடனடியாக அங்கிருந்து கிளம்பிச் சென்றார். விஜய்யை காண்பதற்காக காலை 8 மணிக்கே பிரசாரம் நடக்கும் இடத்திற்கு தவெக பெண் நிர்வாகிகள் குழந்தைகளுடன் வந்து காத்திருந்தனர். கடும் வெயிலில் நீண்ட நேரம் காத்து கிடந்ததால் பிரியா என்ற பெண் மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.

அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், ஒரு குழந்தையும் வெயிலுக்கு சோர்வாகி மயங்கியது. 18 வயதுக்கு குறைவானவர்களை பிரசாரத்துக்கு அழைத்து வரக்கூடாது என நிபந்தனை விதித்தும், பலர் தங்களின் குழந்தைகளுடன் கடும் வெயிலில் காத்து கிடந்தனர். விஜய் பிரசாரத்துக்காக முக்கிய சாலைகள், புதிய பஸ் ஸ்டாண்ட் மூடபட்டதால், சுமார் 4 கிமீ தூரம் மக்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. பள்ளி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவர்கள் அவதிப்பட்டனர். கடும் வெயில் காரணமாக அதிகளவில் குடிநீர் தேவைப்பட்டது.

இருந்த குடிநீர் பாட்டில்கள் காலியானதால் தொண்டர்கள் பெரும் அவதியடைந்தனர். பல்வேறு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தும் தொண்டர்கள் பேரிகார்டு மற்றும் மரத்தின் மீது ஏறி அமர்ந்து இருந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து விட்டதால் விஜய் பேசாமல் சென்று விட்டதாக அறிவித்ததால், அவரது பேச்சுக்காக காத்திருந்த 4 தொகுதி வேட்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து அரசியல் விமர்சர்கள் கூறுகையில், ‘‘பிரசாரத்துக்கு அனுமதி கேட்கும் விஜய், காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் அனுமதி கொடுத்தாலும் கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே இருக்கிறார்.

பிரசாரத்துக்கு அனுமதி கொடுக்கும் இடங்களிலும் மிகவும் குறைந்த நேரமே பேசுகிறார். ஒரே கன்டென்ட்டை பேசுவதால் அடுத்தடுத்த பிரசார பாயிண்டில் பேச்சை விஜய் தவித்து வருகிறார். பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய், கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்து, வேனில் இருந்தபடி பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் கொளத்தூருக்கு சென்று ரோடு ஷோ மட்டும் நடத்திவிட்டு, வில்லிவாக்கத்தில் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு பனையூர் கிளம்பிவிட்டார். இதன்பின் சென்னையில் பல்வேறு அனுமதி கேட்டு பிரசாரத்தை ரத்து செய்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். நெல்லையில் பேசிய விஜய், தூத்துக்குடியில் ரோடு ஷோ மட்டுமே நடத்தினார். தொடர்ந்து, நேற்று முன்தினம் வடலூரில் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே இருந்தார். இன்று நடக்கவிருந்த பிரசாரத்தையும் அவர் ரத்து செய்து விிட்டார். நேற்றும் காரைக்குடியில் விஜய் பேசாமல் திரும்பி சென்றார். இதேபோல், நேற்று புதுக்கோட்டையிலும் பிரசாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், திடீரென ஒத்திவைக்கப்பட்டது. பொதுவாக அரசியல் தலைவர்கள் பிரசாரம் என்றால் ஏதாவது ஒரு இடத்திலாவது நின்று கட்டாயம் பேசுவது வழக்கம்.

ரோடு ஷோ உள்ளிட்ட எந்த வகை பிரசாரமாக இருந்தாலும் அதன் இறுதியில் பேச்சோடு நிறைவு செய்வது வழக்கம். ஆனால், விஜய் இந்த வழக்கத்திற்கு மாறாகவே செயல்பட்டு வருகிறார். இன்னும் ஒரு அரசியல் தலைவராகவே மனதளவில் அவர் பக்குவப்படவில்லையோ என்பதையே இது காட்டுகிறது. ஒரே ரெக்கார்டை போடுவதுபோல் அவர் ஒரே பேச்சை தொடர்ந்து பேசுவதால் விமர்சனத்துக்கு உள்ளாகும் விஜய், பேச்சை தவிர்க்க பிரசார இடத்துக்கு தாமதமாக செல்வதை புது டெக்னிக்காக பயன்படுத்துகிறார்’ என்றனர்.

* ஏர்போர்ட்டில் நிருபர்களை தாக்கிய பவுன்சர்கள்
திருச்சி விமான நிலையத்துக்கு விஐபிக்கள் வரும்போது கூட்டத்தை தடுப்பதற்காக விமான நிலையம் சார்பில் பேரிகார்டு தடுப்புகள் வைத்துள்ளனர். கடந்த முறை தவெக தலைவர் விஜய் வந்தபோது அவரது பாதுகாப்பு பவுன்சர்கள் தனியாக பேரிகார்டு வைத்து நிருபர்கள், டிவி கேமராமேன்கள் விஜய்யை நெருங்க விடாமல் தடுத்தனர். இதனால் பத்திரிகையாளர்களுக்கும் பவுன்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று காரைக்குடியில் பிரசாரத்தை முடித்து விஜய் வந்த வாகனம் திருச்சி விமான நிலையத்தின் விஐபி வருகை பகுதியில் நின்றது. இதையடுத்து நிருபர்கள் விஜய்யிடம் பேட்டி எடுக்க சென்றனர். அப்போது விஜய்யின் பவுன்சர்கள் தனி பேரிகார்டு வைத்து நிருபர்களை தடுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென நிருபர்களை தள்ளி விட்டு பவுன்சர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் வந்து தடுத்தனர். ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் விஜய் அங்கிருந்து விமானத்தில் ஏறி புறப்பட்டு சென்றார். நிருபர்கள் மீது பவுன்சர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* விஜய் தலையில் விழுந்த மர்ம பை
விஜய்யின் பிரசார வேன் காரைக்குடி பகுதியில் விஜய் வந்தபோது கூட்டத்திலிருந்தவர்கள் பலரும் பலவற்றை வீசுவதைக் கண்ட ஒருவர், தன் கையில் பொருட்களுடன் இருந்த பிளாஸ்டிக் பையை தூக்கி வீசினார். அது விஜய்யின் தலையில் விழுந்தது. இதை பாதுகாவலர்கள் எடுத்து வேனிற்குள் வைத்துக் கொண்டனர்.

* விஜய் பிரசார வாகனம், தனி விமானத்தில் சோதனை
சிவகங்கை மாவட்ட எல்லையில் திருப்பத்தூர் எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலைய சோதனை சாவடி அருகே பறக்கும் படையினர் விஜய் வேனை மறித்து சோதனையிட்டனர். சோதனை முடிந்ததும் பிரசாரத்தை தொடர்ந்தார். காரைக்குடியில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு விஜய் நேற்று மாலை வந்தார். விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதிக்கு வந்த போது, அங்கிருந்த ரசிகர்கள் சிலர் குளிர்பான பாட்டிலை வீசினர். இது பிரசார வாகனத்தின் மேல் பகுதியில் சென்று கீழே விழுந்தது. இதற்கிடையே, தேர்தல் பறக்கும் படை பிரிவு அதிகாரி தியாகேஷ்வரன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர், விஜய்யின் தனி விமானத்தில் சோதனை செய்தனர். சுமார் 20 நிமிடம் இந்த சோதனை நடந்தது. இதையடுத்து, தனி விமானத்தில் விஜய் புறப்பட்டு சென்றார்.

* ஷூ காலால் எட்டி உதைத்த பவுன்சர்
மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே விஜய் வேன் வந்தபோது பலரும் வேனை பிடித்து தொங்க முயன்றனர். இதனால், விஜய் பாதுகாப்பிற்கு வந்த பாதுகாவலர்கள் ரசிகர்களை கீழே தள்ளியும், ஷூ அணிந்திருந்த காலால் எட்டி உதைத்தும் கீழே தள்ளினர்.

* விஜய் வாகனத்தில் தாவி ஏறிய வேட்பாளர்: 3 பேர் மிஸ்சிங்
காரைக்குடிக்கு விஜய் தாமதமாக வந்ததால், அதிர்ச்சியடைந்த தொகுதி வேட்பாளர் பிரபு, வேன் வெளியேறியபோது தாவி குதித்து வேனில் ஏற முயன்றார். பவுன்சர்கள் ரசிகர் என நினைத்து கீழே தள்ளமுயன்றனர். உடனடியாக சுதாரித்த விஜய் கை கொடுத்து மேலே தூக்கினார். பின்னர் அவர் விஜய்க்கு நினைவு பரிசு வழங்கினார். விஜய் பரப்புரைக்கு காரைக்குடி வேட்பாளர் மட்டும் களத்தில் இருந்த நிலையில் மற்ற 3 வேட்பாளர்களையும் காணாத நிலையே இருந்தது.

Related Stories: