மத்திய பிரதேசத்தில் நர்மதா ஆற்றில் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் ஊற்றி நடத்தப்பட்ட வினோத வழிபாடு நாடு முழுவதும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக சோஷியல் மீடியாக்களில் வைரலாக பரவி வரும் வீடியோ மதம், சுற்றுச்சூழல் மற்றும் பொது நலன் ஆகியவை சார்ந்த ஒரு கடுமையான விவாதத்தை தூண்டியுள்ளது.
ஆன்மீக காணிக்கையின் ஒரு பகுதியாக பக்தர்கள் சுமார் 11,000 லிட்டர் பாலை நர்மதா நதியில் கொட்டிய ஒரு சடங்கு இந்த வீடியோவில் பதிவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. வைரலாக பரவி வரும் குறிப்பிட்ட வீடியோவில் கோயில் சடங்கின் போது ஆற்றங்கரையில் பெருந்திரளான மக்கள் கூடியிருக்க, ஒரு டேங்கர் லாரி பெருமளவு பாலை நேரடியாகத் தண்ணீரில் கொட்டுவது பதிவாகி இருக்கிறது.
பெருண்டா பகுதியில் உள்ள சத்தேவ் என்ற இடத்தில் அமைந்துள்ள பாதாளேஷ்வர் மகாதேவ் கோயிலில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அங்கு, 21 நாட்கள் நீடித்த மகாயாகமானது நர்மதை அன்னைக்கு செய்யப்பட்ட பிரமாண்டமான பால் அபிஷேகத்துடன் நிறைவடைந்தது. இணையத்தில் பரவி வரும் வீடியோக்களில், சடங்கின் ஒரு பகுதியாக பால் டேங்கர் மூலம் பெருமளவு பால் நதி நீரில் ஊற்றப்படுவதும், பக்தர்கள் பெருமளவில் கூடி, மந்திரங்களை முழங்கி, விழாவில் பங்கேற்பதும் பதிவாகி இருக்கிறது.
பக்திமயமான சூழலில் சடங்கு வழிபாட்டை நிறைவேற்றும் வகையில் காணிக்கையாக தண்ணீர் ஓடும் ஆற்றை பால் ஓடும் ஆறாக மாற்றுவதும், மக்கள் வரிசையில் நிற்பதும் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோயில் ஆகியவை அடங்கிய வீடியோ காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தினாலும் அதைவிட அதிக விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
ஏனென்றால் நதியில் ஊற்றப்பட்ட 11,000 லிட்டர் பாலின் மதிப்பு ரூ. 5.5 லட்சம் முதல் ரூ. 7.7 லட்சம் வரை இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடியோவை பார்த்த பலரும் நாம் ஏற்கனவே நதிகளை கொன்று கொண்டிருக்கிறோம். இதில்சடங்கு என்ற பெயரில் இது தேவையா? இந்த பாலை குழந்தைகள் மற்றும் ஏழைகளுக்கு கொடுத்திருக்கலாம் என்று பலரும் கடுமையாக விமர்சித்து உள்ளனர்.
