×

கேண்டிடேட்ஸ் செஸ்: வைஷாலி வைபோகம்

பாபோஸ்: கேண்டிடேட்ஸ் செஸ் மகளிர் பிரிவு போட்டியில் நேற்று, தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி சக இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக்கை, 9வது சுற்றில் வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறார்.
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகள் சைப்ரஸ் நாட்டின் பாபோஸ் நகரில் நடந்து வருகின்றன. இதில் வெல்லும் வீரர், வீராங்கனை நடப்பு உலக செஸ் சாம்பியன் உடன் மோதும் வாய்ப்பை பெறுவார். நேற்று நடந்த, மகளிர் பிரிவு 9வது சுற்றுப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, சக இந்திய கிராண்ட் மாஸ்டர் திவ்யா தேஷ்முக் உடன் மோதினார்.

இப்போட்டியில் வெள்ளைக் காய்களுடன் ஆடி சாமர்த்தியமாக காய்களை நகர்த்திய வைஷாலி இறுதியில் வெற்றி பெற்றார். இதன் மூலம், வைஷாலி 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். சீன கிராண்ட் மாஸ்டர் ஜு ஜினெரும், 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். மகளிர் பிரிவில் உக்ரைன் கிராண்ட் மாஸ்டர் அன்னா முஸிசுக் 5 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், ரஷ்ய வீராங்கனை கேதரீனா ஒலெக்சாண்ட்ரிவ்னா லாக்னோ 4.5 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளனர்.

* பிரக்ஞானந்தா டிரா
ஓபன் செஸ் பிரிவு 9வது சுற்றுப் போட்டியில் நேற்று, தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, சீனாவின் வெ யி உடன் மோதினார். இப்போட்டி டிராவில் முடிந்தது. அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா – ரஷ்யாவின் ஆந்த்ரே எஸிபெங்கோ இடையிலான போட்டியும் டிரா ஆனது. மற்றொரு போட்டியில் நெதர்லாந்து கிராண்ட் மாஸ்டர் அனிஷ் கிரி, அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனாவை வீழ்த்தினார். 9 சுற்றுகள் முடிவில் உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் ஜவோகிர் சிண்டாரோ 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். கரவுனா, அனிஷ் கிரி, 4.5 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், பிரக்ஞானந்தா, வெ யி, மாத்தியாஸ் புளுபாம் 3ம் இடத்திலும் உள்ளனர்.

Tags : Vaishali Vaibogam ,Paphos ,Chess Women's Division ,Indian Grand Master ,Vaishali ,Tamil Nadu ,Divya Deshmukh ,Candidates Chess Tournament ,Paphos, Cyprus… ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வெற்றி..!