பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்ற டிராக்டர் பறிமுதல்: போலீசாருடன் கடும் வாக்குவாதம்

செங்கல்பட்டு, பிப். 21: மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி, கடந்த 100 நாட்களுக்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழகத்தில் பெட்ரோல், டீசல், காஸ் விலை அதிகரித்து வருவதை கண்டித்தும், செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாவட்டதலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

செங்கல்பட்டு நகர காங்கிரஸ் தலைவர் ஜெ.பாஸ்கர், மாவட்ட நிர்வாகிகள் ஜெயராமன், ரியாஸ், குமரவேல், உமாபதி, மறைமலைநகர் நகரத் தலைவர் தனசேகர், காட்டாங்கொளத்தூர், வட்டார தலைவர் பவுல், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் ஆகாஷ் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, டிராக்டரில், காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் கேன்களை வைத்து பேரணியை துவக்கினர்.அப்போது அங்கு வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார், பேரணிக்கு தடை விதித்தனர். இதனால், மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்திக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரின் தடையை மீறி, காங்கிரசார் பேரணி செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டபடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து பேரணியாக ராட்டின கிணறு பகுதிக்கு சென்று நிறைவு செய்தனர்.இதுகுறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரமூர்த்தி கூறுகையில், செங்கல்பட்டு டவுன் போலீசார், காங்கிரசாரின் ஆர்ப்பாட்டம், பேரணி என எதற்கும் அனுமதி கொடுப்பது இல்லை. 3 முறை போலீசார் இவ்வாறு செய்துள்ளனர் என்றார்.

* செங்கல்பட்டில் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில்,  செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் பேரணி நடந்தது. செங்கல்பட்டு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க கெளரவ தலைவர் எம்.ரவி தலைமை வகித்தார். சங்க தலைவர் அற்புதராஜ், செயலாளர் பாலாஜி, பொருளாளர் டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 200க்கும் மேற்பட்ட ஆட்டோ  ஓட்டுநர்கள் பங்கேற்று, பெட்ரோல், டீசல், காஸ் ஆகியவற்றின் விலை உயர்ந்து வருவதால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த விலை உயர்வை குறைக்க அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லையென்றால், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்து கோஷமிட்டனர்.

Related Stories: