ஆபரேஷன் ஸ்மைல் திட்டத்தில் 15 நாளில் 18 குழந்தைகள் மீட்பு

திருவள்ளூர், பிப்.21: திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குனர் உத்தரவின்பேரில் மாவட்ட போலீஸ் எஸ்பி அரவிந்தன் தலைமையில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஆபரேஷன் ஸ்மைல்  திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் காவல் துறை, சமூக நலத்துறை, குழந்தைகள் நல துறை, தொழிலாளர் நலத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் 1098 மற்றும் 181 இலவச தொலைபேசி எண்ணில் வரும் புகார் மற்றும் காவல்நிலையங்களில் வந்த புகாரின் அடிப்படையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பு கூடுதல் போலீஸ் எஸ்பி மீனாட்சி மற்றும் அதிகாரிகள் கடந்த 15 நாட்களில் காணாமல் போனவர்கள், பிச்சை எடுத்து வந்தவர்கள், கொத்தடிமைகளாக இருந்தவர்கள் என 18 குழந்தைகளை மீட்டனர். இதில் 9 குழந்தைகள் காணாமல்போனதாக கொடுத்த தகவலின்பேரில் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  மீதமுள்ள 9 குழந்தைகள் அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக மாவட்ட போலீஸ் எஸ்பி அரவிந்தன் தெரிவித்தார்.

Related Stories:

>