பொள்ளாச்சி : பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு, சித்திரை விசுவை எதிர்நோக்கி கேரள மாநில பகுதியில் இருந்து பலாப்பழம் வரத்து துவங்கியது. ரூ.500 வரை விலை போவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாம்பழம், தர்பூசணி, பலாப்பழம், அன்னாச்சி பழம் மற்றும் கரும்பு உள்ளிட்டவை சீசனை பொறுத்து விற்பனைக்காக மொத்தமாக கொண்டு வரப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி இறுதியிலிருந்து தர்பூசணி வரத்து அதிகமாக இருந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து லாரி மற்றும் டெம்போக்களில் கொண்டு வரப்படும் தர்பூசணிகளை வியாபாரிகள் மொத்த விலைக்கு வாங்கி செல்கின்றனர்.
அதுபோல, ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாதத்திற்கு முன்னதாக, கேரளாவில் இருந்து வரும் பலாப்பழம், தற்போது பொள்ளாச்சி மார்கெட்டுக்கு வர துவங்கியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம், கொழிச்சாம்பாறை, சாலக்குடி, அங்கேஷ்வரி, கொரடி, பாட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பலாப்பழம் வரத்துவங்கியுள்ளது.
காந்தி மார்க்கெட்டில் குவிந்துள்ள பலாப்பழங்களை உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி உடுமலை, திருப்பூர், கோவை, பல்லடம், ஈரோடு மற்றும் வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர்.
இதனால், கேரள பலாவுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அதிக பட்ச விலையாக ரூ.350 வரை விற்பனையானது. இந்த ஆண்டு குறைந்த விலையாக ரூ.150 முதல் அதிகபட்ச விலையாக ரூ.500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை ஏற்றத்துடன் இருந்தாலும் வெளியூர் வியாபாரிகள் நேரில் வந்து வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ‘‘இந்த ஆண்டில், வரும் 14ம் தேதி சித்திரை மாதம் முதல் தேதியையொட்டி (சித்திரை விசு) பலாப்பழம் வரத்து துவங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பலாப்பழம் வந்தாலும், அதிகபட்சமாக கேரள மாநில பகுதியில் இருந்தே வருகிறது. கடந்த ஆண்டை விட இந்தமுறை விலை ஏற்றத்துடன் உள்ளது. சித்திரைவிசு நெருங்குவதால் விலை சற்று அதிகரித்துள்ளது’’ என தெரிவித்தனர்.
