*தமிழக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு
வல்லம் : தஞ்சை மாவட்டம் வல்லம் பேரூராட்சிக்கான பம்பிங் மெயின் லைனை ரூ.2 கோடியே 9 லட்சம் மதிப்பில் அட்வான்ஸ் இரும்பு குழாயாக மாற்றி தந்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. இங்கு மக்களின் தேவைக்காக வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் இருந்து பம்பிங் மெயின் லைன் அமைந்துள்ளது. இங்கிருந்து குடிநீருக்காக வல்லம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு சிமெண்ட் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
மிகவும் பழமையான இந்த சிமெண்ட் குழாய் அவ்வப்போது பழுதடைந்து வந்தது. இதனால் பேரூராட்சி நிர்வாகத்திற்கு செலவுகள் அதிகரித்தது. மேலும் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இந்த சிமெண்ட் குழாய் பம்பிங் மெயின் லைனை மாற்றி புதிதாக மேம்படுத்தப்பட்ட இரும்பு குழாய் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள பம்பிங் லைனில் இருந்து வல்லம் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்புக்குழாய் அமைக்க ரூ.2 கோடியே 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு குழாய் பொருத்தும் பணிகள் விரைவாக நடந்தது. இதையடுத்து அடிக்கடி பழுதடைந்து வந்த சிமெண்ட் குழாய்கள் முழுமையாக அகற்றப்பட்டு இரும்புக்குழாய் பொருத்தப்பட்டது.
இதையடுத்து வல்லத்தில் ரூ.47 லட்சம் மதிப்பில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி புதிதாக கட்டப்பட்டு அதில் குடிநீர் நிரப்பப்பட்டு வல்லம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த குழாய் இன்னும் 30 ஆண்டுகளுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லாமல் குடிநீர் விநியோகம் தொடரும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. மக்களின் தேவையை உணர்ந்து அதற்கேற்ப வல்லம் பேரூராட்சியில் பல்வேறு நலத்திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அதில் முக்கியமாக இந்த குடிநீர் டிஐ பைப் அமைக்கும் பணி அமைந்துள்ளது. இவ்வாறு மக்கள் தேவையை உடனடியாக பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்து திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வல்லம் பகுதி மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் கூறுகையில்; பழமையான சிமெண்ட் குடிநீர் குழாய்கள், கனரக வாகனங்கள் செல்வதால் அழுத்தம் ஏற்பட்டு பல இடங்களில் உடைந்து போனது.
இவற்றை சீரமைக்க ஆயிரக்கணக்கில் செலவுகள் ஏற்பட்டது. மேலும் அதை சீரமைக்கும் வரையில் குடிநீர் விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மக்கள் அவதியடைந்து வந்தனர்.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பழைய சிமெண்ட் பைப்புகளை அகற்றி விட்டு மேம்படுத்தப்பட்ட இருப்பு குழாய்கள் அமைக்க ரூ.2.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததை அடுத்து இப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி குடிநீர் விநியோகத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
