கூடலூர்: தேனி மாவட்டத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் காய்கறிகள் கேரளத்திற்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு கொண்டு செல்லப்படும் காய்கறிகளுக்கு உரிய பணத்தை பெற்று திரும்ப கொண்டு வருவதில் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தமிழக பகுதியில் உள்ள காய்கறி வியபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன் தினம் கூடலூர் புறவழிச் சாலையில் தேர்தல் படையினர் நடத்திய வாகன சோதனையின் போது சின்னமனூர் அடுத்துள்ள ஓடைப்பட்டியில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகளை ஏற்றிச் சென்று திரும்பிய சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த ஓடைப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் பிரேம் என்பவரிடமிருந்து ரூ.71,000 த்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.
மேலும் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் கைப்பற்றப்பட்ட பணத்தை உத்தமபாளையம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.இது குறித்து கூடலூரில் காய்கறி கமிஷன் கடை வைத்துள்ள வியாபாரிகள் கூறுகையில், ‘‘தேனி மாவட்டத்திலிருந்து நமது அண்டை மாநிலமான கேரளாவிற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், வாழை, பப்பாளி உள்ளிட்டவை கேரளாவில் உள்ள காய்கறி சந்தைகளுக்கும், கடைகளுக்கும், மொத்த வியாபாரிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
இவ்வாறு கொண்டு செல்லப்படும் பொருள்களுக்கு பெரும்பாலும் பணப்பட்டுவாடா காய்கறிகள் ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களின் டிரைவர்கள் மூலமே நடைபெறுகிறது. இதனால் பணம் வசூல் செய்வதில் நேரம் மிச்சப்படுவதோடு, அதற்கான ஆட்கள் தேவையும் தேவைப்படுவதில்லை.
இதனிடையே, ஏற்கனவே தமிழக பகுதியில் உள்ள காய்கறி வியாபாரிகள் தாங்கள் அனுப்பி வைக்கும் விளைபொருள்களுக்கு உரிய விலை மற்றும் காய்கறிகளை விற்று பணம் பெறுவதில் மிகுந்த சிரமத்தில் இருந்து வருகின்றனர்.
கேரளாவில் உள்ள காய்கறி வியாபாரிகளிடம் குறைந்தது லட்சங்களிலிருந்து அதிகபட்சம் கோடிகள் வரை காய்கறிகளுக்கு பில் தொகை நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது கேரளாவிலும் தமிழகத்திலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கேரளத்தில் விற்கப்படும் காய்கறிகளுக்கு உரிய பணத்தை திரும்ப பெற்று கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதை காரணம் காட்டி அங்குள்ள வியாபாரிகள் சிலர் நிலுவையில் உள்ள மற்றும் தற்போது கொண்டு செல்லும் சரக்குகளுக்குரிய பணத்தை தருவதில் இழுத்தடிப்பு செய்கின்றனர். மேலும் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு வருவதில் சிக்கல் உள்ளதால் வாகனப் ஓட்டிகளும் பணம் பெற்று வருவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் இங்குள்ள வியாபாரிகள் விவசாயிகளுக்கு பணத்தை பட்டுவாடா செய்வதிலும் தடங்கள் ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.
