- ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி
- மையம்
- ஊட்டி
- அரசு பாலிடெக்னிக் கல்லூரி
- ஊட்டி பிங்கர்போஸ்ட்
- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்
ஊட்டி : ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று காவல் பார்வையாளர் மற்றும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ேவட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30ம் தேதி துவங்கி 6ம் தேதி வரை நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 736 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 3 தொகுதிகளிலும் பயன்படுத்தப்படும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு அதில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட உள்ளது.
தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஊட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் ஸ்ட்ராங் ரூம், மற்றும் ஓட்டு எண்ணும் அறைகள் துரித கதியில் தயார் செய்யப்பட்டு வருகிறது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளின் ஜன்னல்கள் அனைத்தும் பிளேவுட், தகரம் போன்றவை கொண்டு மூடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் அறைகளில் இரும்பு வலை தடுப்புகள் போன்றவைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தரையில் வர்ணம் பூசி எண்ணிடும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக காவல் பார்வையாளரான ஐபிஎஸ் அதிகாரி லதா மனோஜ் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள வாக்கு எண்ணும் அறை, பொருட்கள் வைக்கும் பாதுகாப்பு அறை, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறை ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டனர்.
மேலும் அலுவலர்கள், முகவர்கள் வந்து செல்லும் பாதை மற்றும் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், தொடர் மின்சார வசதி, வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்படும் இடங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அதிகாரிகள் கூறுகையில்,‘‘தேர்தல் ஆணையம் அனைத்து வாக்கு எண்ணும் மையத்தில் ேதவையான வசதிகளை உறுதி செய்திட அறிவுறுத்தி உள்ளது.
அதன் அடிப்படையில் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்குள் உள்ளே செல்லும் வழி, வெளியேறும் வழி, வாகனங்கள் நிறுத்துமிடம், வாக்கு எண்ண ஏதுவாக போடப்படும் மேஜை, முகவர்கள் வந்து செல்லும் வழி, மின்னணு வாக்குபதிவு இயந்திரம் பாதுகாப்பாக வைக்கும் அறை, மின், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் போன்றவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது’’ என்றனர்.
முன்னதாக பொதுமக்கள் தேர்தல் தொடர்பான ஏதேனும் புகார்கள் இருப்பின் சி-விஜில் ஆப் மூலம் தெரிவிப்பது தொடர்பாக விளம்பரப்படுத்த வேண்டும் என காவல் பார்வையாளர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட எஸ்பி நிஷா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) லோகநாயகி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.
